தாதனூர்

பாப்பிரெட்டி பட்டியில் (ஏப்ரல். 2023)இருந்து புறப்பட்ட எங்களின் கார் அயோத்தியாப் பட்டணம் வழியில்  சேலம் வர வேண்டியது, வலப்பக்கம் திரும்பி வலசையூர் நோக்கிப்   பயணித்தது.....டிரைவரின் அருகே அமர்ந்து இருந்த சித்தப்பா திரு.பழனியப்பன் அவர்கள்...சேலம் அஸ்தம்பட்டி திருவள்ளுவர் போக்கு வரத்து கழகத்தில் பணியாற்றியவர் ... தான் பிறந்து வளர்ந்த தாதனூரை  பார்த்துச் செல்லலாமா என்றுக் கேட்டார்.....  தாதனூர்..தாதனூர்..என்று வாழ்நாளில் பலமுறை.. தாத்தா பாட்டி...அப்பா.அம்மா.. சித்தப் பாக்கள். சித்திகள்... அத்தை.. மாமா க்கள்..பங்காளிகள் என .பலரிடமும் கேட்ட..கேட்ட அந்த ஊர் தாதனூரைப்  பார்க்க வேண்டும் என்று பல முறை முயன்றும் ..பார்க்க முடியாமல் தேக்கம் கொண்டதே... அதைப் பார்க்க வாய்ப்பு இன்று கிடைத்ததே என்று...உடனே ..தாதனூர் போகலாம்ப்பா....என்றோம் நானும் பின் சீட்டில் அமர்ந்து இருந்த என் துணைவியாரும்...................................சேலம் நகருக்கு பெருமை சேர்க்கும் மேட்டூர் அணைக்குப் பிறகு ...சேர்வராயன் மலைத்தொடரில் சற்று மேற்கே  தள்ளி இருக்கும் ஏழைகளின் ஊட்டி...ஏற்காடு மலையின் இரண்டாவது மலைப் பாதையான  குப்பனூர் வழியாகச் சென்று  வலசையூர் தெற்கே இறங்கினால்... சற்றுத் தொலைவில் தெரியும்  வீராணம் பிரிவு பாதையை விட்டு ...இடப்புறம் நுழைந்தால்   தாதனூர் வரும்..... ........அம்மாப்பேட்டை... விடுத்து..சேலத்தில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் மீட்டர் கேஜ் புகை வண்டி இரயில் பாதையின் மீது ஏறி வட கிழக்கே பார்த்தால்..              தாதனூர் தெரியும்....அதன்                   பின்புறம் இருக்கும்                       அல்லிக்குட்டை...வீராணம் ஊர்களைத் தாண்டினால்  சற்று தூரத்தில்....சேர்வராயன் மலையின்  அடிவாரம் தெரியும்....அடிவாரம் தொட்டு தாதனூர் வரை .....நெடுக செம்மண் வெள்ளாமை நிலங்களுக்கு நடுவே ஒய்யாரமாக பனை மரங்கள் உயர்ந்து நிற்கும். வேப்பமரங்களும்...நாவல் மரங்களும் அரச மரங்களின் உயரத்திற்கு போட்டிப் போட்டு வளர்ந்து இருக்கும்.....ஆடு மாடுகளை அவைகளின் நிழலில் கட்டி வைத்து இருப்பார்கள்.இந்த மரங்களின் தலை உச்சிக்கு மேலாக உயர்ந்து அகன்று நிற்கும் ஒரு  பெரிய அரச மரத்தின் அடியில் தான் அடிக்கடி நியாயம் பேசுவார்கள்.பஞ்சாயத்து நடக்கும்.அதன் கீழ் தான் வாரச் சந்தை..ஆடு..மாடு விற்கும் மாதச் சந்தை ஆரவாரத்துடன் நடை பெறும்..அந்த சந்தைக்கு வரி வசூல் செய்து .. ஏலம் போட்டு ...பணத்தை வாங்கி ..விற்றவர் கையில் கொடுத்து பத்திரமாக அனுப்பி வைப்பார் முருங்கப்பட்டி தாத்தா ஆறுமுகம்.... அவரின் கண் அசைவு இல்லாமல் எந்த இலை அசைவும் இருக்காது. ஆறு திசைகளிலும் ஆறுமுக தாத்தாவின் ஆறுமுகமும் பார்த்துக் கொண்டு இருக்கும். யாரும் தப்ப முடியாது... தவறு செய்ய முடியாது.
. .....வலசையுரில் திரும்பிய கார்..ஒரு இருபது நிமிட பயணத்துக்குப் பிறகு..சித்தப்பா திரு.பழனியப்பன் அவர்கள் வழிகாட்டிய படி ..நாங்கள் பயணித்த வழியில் இருந்து... அம்மாபேட்டை வழியாக சேலம் செல்லும் பாதையில் இருந்து விலகி . தாதனூர்  ...மெயின் ரோட்டில்  ...ஒரு முன்னூறு அடி தூரத்தில் இருந்த ஒரு காம்பவுண்ட் கேட் முன்பாக நின்றது....டிரைவரின் சீட் அருகில் இருந்து இறங்கிய சித்தப்பா பழனியப்பன் அவர்கள் ...கீழே இறங்கி ..குனிந்து..அந்த கேட் முன்னால் இருந்த நிலத்து மண்ணை தொட்டுக் கும்பிட்டு..இரண்டு கைகளால் மண்ணை அள்ளி என் கையில் கொடுத்து ..அதில் கொஞ்சம் எடுத்து தன் நெற்றியில் திருநீறு போல பூசிக் கொண்டார். .........எங்கள் முன்னே இருந்த அந்த காம்பவுண்ட் கேட்....இரண்டு தூண்களை கொண்டு இருந்தது... இரண்டுக்கு இரண்டு அடி அளவில்  பத்தடி உயரத்தில்   இருந்தது..தூண்களின்  இடையே பத்து அடி அகலத்தில் இடைவெளி இருந்தது..அதில் இரும்பு..அல்லது மரச் சட்டங்களால் ஆன கேட் இருந்து இருக்கும்.ஆனால் இப்போது கேட் எதுவும் இல்லை.அது இருந்ததற்கான அடையாளங்கள் அந்த இருப்பக்க தூண்களில் காணப் பட்டன..... வலதுப் பக்கத் தூணை ஒட்டி ஒரு நூறு அடி நீளத்துக்கு..  ஒன்றரை  அடி அகல கருங்கல் சுற்றுச் சுவர் பத்து அடி உயரத்துக்கு உயர்ந்து காணப்பட்டது.அது கிழக்கே இருந்த மங்களூர் ஓடு வேய்ந்த  வீட்டின் வெளிச் சுவருடன் இணைந்து இருந்தது ...அதைப்போலவே இடது பக்கத் தூணில் இருந்து அதே அகலம் ..உயரம்..அளவு கொண்ட சுற்றுச் சுவர் மேற்கே ஒரு நானூறு அடி நீளத்தில் ஓடி..அங்குள்ள ஒரு வீட்டின் வெளி முகப்பில் இடித்து நின்றது....... கேட் இல்லாத அந்த தூண்களின் இடையே அதன் வழியே..கண்களை நுழைத்துப் பார்த்தால் .... எதிரே நூறடி தூரத்தில் விவசாயக் கிணறும்..அதைச் சுற்றி உயர்ந்த தென்னை மரங்களும்....மா மரங்களும்... வாழை மரங்களும் காணப்பட்டன.கிணற்றின் அருகே மேற்க்கில் புதிதாய் கட்டப் பட்ட ஒரு மெத்தை வீடும்...அதன் முன்னால் ஒரு பெண்ணும்  குழந்தையும் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.மேலும் அந்த கிணற்றை அடுத்து.... நேராக அடுக்கு.. அடுக்காக  தொடர்ந்து  பார்க்கும் போது நெல் வயல்கள்களில் நீர் நிரம்பி....நெல் மணிகள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தன.அதற்கடுத்து உழுது ..ஓட்டிப் போட்ட செம்மண் நிலங்கள் அடிவாரம் வரை கண்ணுக்குத் தெரிந்தன.அந்த நிலங்களில் ஆடு...மாடுகள் மேய்ந்துக் கொண்டிருந்தன....அவைகளுக்கு மேலே மேகங்கள் மலை உச்சி நோக்கி மெதுவாய் மிதந்து கொண்டிருந்தன.கண்ணிற்க்குத் தெரிகின்ற இந்த காட்சிகளை எல்லாம் ஒரு வெள்ளைத் தாளில் மை இட்டு வரைந்தால்....ஒரு அழகான .. கண்ணைக் கொள்ளைக் கொள்ளும் வண்ண ஓவியமாக  இயற்கை காட்சிக்களாகத் தெரியும்...இதயத்தை சுண்டி இழுத்துச் செல்லும் சிங்கார சிற்பங்களாகத் தெரியும் .......நானும் என் துணைவியாரும் .. ..எங்கள் கண் முன் இருந்த இந்த இயற்கை காட்சிகளை கண்களால்  வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தப் போது...சித்தப்பா பழனிஅப்பா என்ன செய்துக் கொண்டு இருந்தார் என்றால்...அந்தக் காம்பவுண்ட் கேட் தூண்களைப் பார்த்ததும்... தன் கண் முன்னே இருந்த தோட்டத்தில் தான் குளித்த.. நீர் குடித்த ....கிணற்றைக் கண்டதும்..தான் பிறந்த அந்த ஓட்டு வீட்டைப் பார்த்ததும்...சகோதரர் களோடு ஓடி விளையாடிய அந்த அகன்ற வாசலைப் பார்த்ததும்...            நீண்டு நெடுகத் தெரியும் வயலும்  வரப்பும்..அதன் கடைசி எல்லையில் எழுந்து   நின்று பார்வையைத் மறைக்கும்   சேர்வராயன் மலையின் எதிர்த் தோற்றதைக் கண்டதும்  மெய் மறந்து நின்றார் ..இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்து...அடக் கடவுளே... என்றுச்  சொல்லி எங்களைப் பார்த்தார்...... என்னப்பா..நீங்க பிறந்த மண்ணையும்...வீட்டையும் ...ஓ.. வென்றுக் கூவி ஓடி விளையாடிய  ..அந்த நிலத்தையும் ...ஆழ்ந்து சுவாசித்த மாசு இல்லா சுத்தக்  காற்றையும்...பசுமையும் குளுமையும் நிறைந்த மலை அடிவாரத்து அழகு காட்சியையும் கண்டு..மலரும் நினைவுகளில் மூழ்கி  விட்டீர்களா என்று நாங்கள்  சொல்லும் போது..இல்லை ....அதெல்லாம் இல்லை...அந்த சூழல் அடியோடு இப்போது மாறிவிட்டது..அந்த அழகான இயற்கையை அழித்து வீடுகளும்..வியாபாரக் கட்டிடங்களும் கட்டி விட்டார்கள்.இப்போது இருக்கிறது இந்த இரண்டு தூண்களும் அந்த ஓட்டு வீடும், அந்த பண்ணைக் கிணறும்தான் ...நாங்கள் வளரும் போது பார்த்த அடையாளங்கள். அதோ அந்த கிணற்றைச் சுற்றி இருக்கும் உயரமான தென்னை மரங்கள் தாத்தா வைத்த மரங்கள்.அதில் இப்போது  காய்ப்புக் கூட குறைந்து விட்டது.இந்த மாமரம் கடைசி தம்பி நாகராஜு வைத்தது.அதோ அந்த மேட்டின் மீது இருக்கும் அரசமரம் தான் பஞ்சாயத்து மரம்..இந்த ஊர் மக்களின் வாழ்க்கையை வழி நடத்தி சென்றதும் அந்த அரச மரம் தான்...ஒரு சிலரின் வாழ்க்கையை  பாழாக்கியதும் அந்த அரச மரத்து பஞ்சாயத்து தான்..அங்கே நடக்கும் பஞ்சாயத்தை ஏற்பாடு செய்வதும்  தாத்தா தான் ..அந்தத் தீர்ப்பை ..தன் மனதுக்கு சரியில்லை என்றால் எதிர்த்து நிற்பதும் தாத்தா தான்.. சரி என்றால் அதை செயல் படுத்துவதும் தாத்தாதான்.தாத்தா இல்லாமல் அங்கே எதுவும் நடக்காது.தாத்தாவுக்கு தெரியாமல் எது ஒன்றும் நகராது.
இதைச் சொல்லச்  சொல்ல சித்தப்பா விற்க்கு கண்கள் கலங்கின...... பழனியப்பா சித்தப்பாவுடன்  எனக்கு நெருங்கி பழகும் வாய்ப்பு குறைவாகத்தான் அமைந்து இருக்கிறது.....ஒருமுறை ..நான் என் கல்லூரிப் படிப்பை முடித்து(1981)..வேலைத் தேடும் நேரத்தில்.. சேலம் எம்ப்ளாய்  மெண்ட் அலுவலகத்தில் இருந்து வேலை வாய்ப்புக்கு ஒரு அழைப்பு வந்தது.அதை படித்துப் பார்த்த அப்பா ...என்னை ..குழந்தை சித்தப்பா ... திரு.மாதப்பன்..அஸ்தம்பட்டி ..அரசு மத்திய ஆட்டோ மொபைல் வொர்க் ஷாப்பில் ஃபோர் மேன் ஆக பணி ஆற்றியவர்...அவரிடம் சென்று              ஏதாவது சிபாரிசு கேள்..என்று மேட்டூரில் இருந்து சேலத்துக்கு அனுப்பி வைத்தார்..சேலம் வந்த நான் அஸ்தம்பட்டி சென்று..சித்தப்பா குழந்தை திரு.மாதப்பன் அவர்களை அவர் வேலை செய்யும் இடத்தில் சந்தித்தேன் .அங்கிருந்தவர்கள் என்னைப் பற்றி விசாரித்த போது...சித்தப்பா சொன்னார் ...என் பெரிய அண்ணன் மகன் என்று அறிமுகப் படுத்தினார்......நீங்க எல்லாம் பெரிய ஆளுங்கப்பா .. பொசுக்கு..பொசுக்குன்னு இருக்கிறீங்க பிள்ளைகளை. .. படிப் பில.. நல்லா கொண்டு  வறீங்க...என்று... பொறுக்க முடியாத உள்ளத்தில் ...வெறும் வார்த்தைகளால் எனக்கு  வாழ்த்துச்  சொன்னார்கள் அங்கிருந்தவர்கள்....பிறகு அனுமதி பெற்று .. என்னை வெளியே அழைத்து வந்த குழந்தை  சித்தப்பா ..எதிரே இருந்த ஒரு தேநீர் கடையில் இருந்த மர பெஞ்சில் அமரவைத்து இரண்டு பருப்பு வடையும் ..சுடச் சுட தேநீரும் வாங்கிக் கொடுத்து...தானும் சாப்பிட்டு...எனக்கு வந்த அந்த வேலை அழைப்பை படித்துப் பார்த்தார்.படித்தவர்...கண்ணு...இது மெட்ராஸில் உள்ள திருவள்ளுவர் போக்குவரத்து கழகத்தில் அசிஸ் டென்ட் ஃபோர்மேன் போஸ்டிற்கு இன்டர்வியூ வந்து இருக்கு...இதற்க்கு சிபாரிசு வேண்டும்  என்றால்...உதட்டின் மேல் விரல் வைத்து சற்று யோசித்தவர்.. ம்..இதற்கு அண்ணா தொழிற்சங்கம் தலைவரை பார்த்தால் பலன் கிடைக்கும்... ...என்னை விட அந்தத் தலைவரை  தம்பி பழனியப்பன் நன்கு அறிவார்......சரி வா..தம்பியிடம் போகலாம் என்று..என்னை எதிரே இருந்த சேலம் TTC ..திருவள்ளுவர் போக்கு வரத்துக் கழகத்தில் பணியாற்றிவரும் திரு.பழனியப்பன் சித்தப்பாவிடம் அழைத்துச் சென்றார் ...என்னைப் பார்த்ததும்...வாப்பா..நல்லா இருக்கியா..அப்பா அம்மா..எல்லாரும் நலமா இருக்காங்களா என்று நலம் விசாரித்தார்  .அப்புறம் என்னப்பா ..விசயம்.இவ்வளவு தூரம் வந்து இருக்க..என்றார்.....எனக்கு மெட்ராஸ் TTC  யில் .இருந்து வேலைக்கு இன்டர்வியூ வந்து இருக்கு .. ஏதாவது சிபாரிசு...அதற்காக அப்பா அனுப்பி வைத்தார் என்றேன்.குழந்தை சித்தப்பாவும் ..ஆமாம்ப்பா...உனக்குத்தான் நம்ம யூனியன் மாநிலத்  தலைவர் தெரியுமே..அவருக்கு நம்ம பிராஞ்ச் தலைவரிடம் இருந்து ஒரு லட்டர் வாங்கிக் கொடுத்தால் ... நல்லா இருக்குமே என்றார் குழந்தைச் சித்தப்பா...சற்று யோசனைக்குப் பிறகு வாயில் இருந்த வெற்றிலை எச்சிலை துப்பி .... ஆமா...அதுதான் சரி என்று TTC அலுவலகத்தில் நுழைந்து வெளியே வந்த பழனியப்ப சித்தப்பா  ..வாப்பா...என்று என்னை உள்ளே அழைத்து..அந்த பிராஞ்ச் யூனியன் தலைவரிடம் என்னைப் பற்றி சொல்லி.. மெட்ராஸ் மாநிலத் தலைவருக்கு ஒரு சிபாரிசு கடிதம் எழுதித் தர வேண்டினார்.அதற்க்கு..அந்த பிராஞ்ச் தலைவர் ..சரி நாளைக்குத் தருகிறேன் என்றார்...ஐயா..என் பெரிய அண்ணன் மகன்..மேட்டூரில் இருந்து வந்து இருக்கிறார்.இப்போதே எழுதித்         தாருங்கள் ..இது வரை நான் எதற்காவது வந்து  இருக்கிறேனா...உரிமையோடு கேட்கிறேன் .நீங்கள் இப்போதே என் மகனுக்கு சிபாரிசு கடிதம் எழுதி கொடுத்தப் பிறகு தான் மதிய சாப்பாட்டுக்கு போக வேண்டும் என்று கண்டிப்பாகச் சொன்னார் பழனியப்பன் சித்தப்பா ..அவரின் குரல் சற்று அதிகமாகவே இருந்தது.எனக்கு பயமாகிப் போய்விட்டது .. என்னடா  இது... சித்தப்பா  கோவமாகி சத்தம் போடுறாரு...நம்மளால இவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினை வந்துட்டா....என்ன செய்வது என்று எச்சிலை விழுங்கினேன் .குழந்தை சித்தப்பா அவரின் அலுவலகம் சென்றப் பிறகு..சித்தப்பா பழனியப்பன்...அந்த அண்ணா தொழிற் சங்கம் லெட்டர் பேடு பதிவில் எழுதப்பட்ட கடிதத்தை என்னிடம் கொடுத்து ...மாநிலத் தலைவர் திருவல்லிக் கேணியில் இருக்கிறார். .விலாசம் கொடுத்து உள்ளார்..அவரைப் போய் பாருப்பா என்றார்.மேலும்... கொஞ்சம் இரு ..என் வேலையை முடித்து வருகிறேன் என்று வொர்க் ஷாப் உள்ளே நுழைந்தார் .....பின்னர் நானும் பழனியப்பன் சித்தப்பாவும் அருகே இருந்த அவரின் மணக்காடு  வீட்டிற்குச் சென்றோம்.வீட்டின் வெளியே இருந்த சிறு நெல்லி மர நிழலில் நின்றுக் கொண்டு இருந்த என் சித்தி சகுந்தலா அம்மா.. முகச் சிரிப்புடன்..கண்ணு ..வாப்பா என்று அன்போடு அழைத்தார். சித்தியிடம் வந்த விசயத்தை சொன்னேன்.. ..ம் ..          ஆமாப்பா..இந்த காலத்துல எல்லாம் சிபாரிசுலதான் எல்லாம் ஓடுது..இல்லைனா வேலை வாங்க முடியாது... என்று சித்தி சொல்லும் போது .. பேச்சில் குறுக்கிட்ட சித்தப்பா.....அதெல்லாம்  அப்புறம் பேசிக்கலாம் முதல்ல ... சோத்தப் போடு ...பையன் பசியோடு வந்திருக்கான்  ....  ம் என்ன செய்து இருக்க ... கொண்டா என்றவர் சரி..வாப்பா சாப்பிடலாம் என்று என்னை  அழைத்தார்.சித்தி சிரித்துக் கொண்டே  எனக்கு..கைக் கழுவ சொம்பில் தண்ணீர் கொடுத்தார்..கை கழுவி...தம்பி...தங்கைகள்  எப்போ ஸ்கூல்ல இருந்து வருவார்கள் என்றேன்.அவர்கள் வர சாய்ந்திரம் ஆகும் என்றார் சித்தி..... ஹாலில் சித்தப்பாவுக்கு  முன்பாக மூன்றாக மடித்து போடப் பட்டு இருந்த கோரை பாய் மீது நான் சம்மணம் போட்டு உட்கார்ந்தேன். சித்தி ..ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டில் அப்போது தான் சூடாக வடித்த சாதத்தை அன்னக் கரண்டியால் அள்ளி அள்ளி மெதுவாகப் போட்டார்.அப்பாவுக்கும் அப்படியே போட்டு விட்டு...மணக்கும் ஆட்டுக்கறி வறுவலை..கரண்டி நிறைய எடுத்து தட்டு நிறைய போட்டார்.போதும் ...போதும் என்றப் போது..கண்ணு.. நீ...பிறந்து வளர்ந்ததில் இருந்து இன்னைக்குத்தான் எங்கள் வீட்டிற்க்கு வந்து இருக்க... இன்னைக் குத்தான் எங்கள் வீட்டில் சாப்பிடுற ..என் கையால சமைத்த உணவை நீ நிறைய வாங்கி சாப்பிடணும்.. அப்பத்தான் எனக்கு மகிழ்ச்சி என்றார் சித்தி... ம் ...என்னை மறந்துட்டியே எனக்கு போடு...என்றார் சித்தப்பா......பசி நேரம்... சாதத்தின் நடுவே கறித் துண்டை வைத்து வாயில் போட்டு மெல்லும் போது....சித்தியின் கை பக்குவமும் ...ருசியும்...சுவையும் மணமும்...இன்னும் அள்ளி அள்ளி வாயில் போட்டு சாப்பிடத்  தூண்டியது.....வேண்டாம் போதும் என்று சொன்ன போதும் கூட .. மறு சோறு வாங்கித்தான் ஆகவேண்டும் என்று மீண்டும் சாதம் வைத்து..கறி வறுவலை அள்ளி போட்டார் சித்தி.....அப்பாடா...என் வயிறும் நிறைந்தது.சித்தியின் மனமும் நிறைந்தது.சிரித்த முகத்தோடு ..அன்பு கலந்த வார்த்தைகளோடு... தாய் உள்ளத்தோடு..அவர் என்னை உபசரித்து...உணவு பரிமாறி.. வாசல் வரை வந்து என்னை வழி அனுப்பி வைத்தது நெஞ்சில் நிறைந்த ஒன்று.....பின்னர் இருபத்து ஒன்பது  வருடங்களுக்குப் பிறகு (ஆகஸ்ட் 2010) தங்கை ஜோதியின் இல்ல நிகழ்வுக்கு போயிருந்த என்னைக் கண்டதும் ...கண்ணு நல்லா இருக்கியாப்பா..என்று சித்தி சகுந்தலா அம்மா என்னை அதே சிரித்த முகத்துடன்...அதே அன்பு உள்ளதுடன் நலம் விசாரித்தபோது மகிழ்ந்து போனேன்.அந்த நிகழ்ச்சியில் ..நான் செய்ய வேண்டியதை செய்து முடித்தவுடன்...என் கையில் அவர்கள் வீட்டார் செய்ய வேண்டிய பொருள்களை  ஒவ்வொன்றாகக் கொடுத்து  என்னை கொடுக்கச் சொன்னார்கள்.நிகழ்ச்சி முடிந்ததும்..பழனியப்பன் சித்தப்பாவும்..சித்தி சகுந்தலா அம்மா வும் ..அருகில் வழியில் இருக்கும் தங்களின் வீட்டிற்க்கு அழைத்தார்கள்.தங்கைகளும் ஆம்மாம்..அண்ணா..நாங்கள் புது வீடு கட்டிய பிறகு ....நீங்கள் ..எங்கள்  வீட்டிற்க்கு வந்ததே இல்லை..வாங்க அண்ணா என்று  பாசத்தோடு  அழைத்தார்கள்.அவர்களின் முகத்தில் ஆவல் மிகுந்து காணப் பட்டது.அன்றையதினம் ...நான் பெங்களூருவில் refresher course யில் இருந்த படியால்...இந்த நிகழ்ச்சி முடிந்து..சேலம் வந்து ட்ரெயின் பிடித்து ஈரோடு சென்று..அங்கே      மையிலாடு துறையில் இருந்து மைசூர் செல்லும் ட்ரெயின் பிடித்து பெங்களூர் சென்று அடுத்த நாள் காலை பயிற்சி வகுப்பில் சேர வேண்டும்.இப்போதே இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது..நேரம் டைட் ஆக இருந்ததால் ...இன்னொரு நாள் வருகிறேன் என்று தவிர்த்தேன்..சித்தியும்..தங்கைகள் மூவரும் ஆவலுடன் அழைக்கும் போது...ஒரு  ஐந்து நிமிடம் வீட்டிற்க்கு வாங்க அண்ணா என்று அழைத்த தை...ஏற்காமல் இன்னொரு நாள் வருகிறேன் என்றுச் சொல்லி விடைப் பெற்றேன்.சித்தப்பா..சித்தி.. தங்கைகள்... சரிப்பா ...சரி அண்ணா...என்று என்னை  வழி அனுப்பி வைத்தார்கள். அப்போது அவர்கள் ஐந்துப் பேரின் முகத்திலும் ஒரு மவுனம் தெரிந்தது.அதில் ஏமாற்றம் கலந்து இருந்தது......நான் பெரும்பாலும் வெளி ஊரிலேயே  ...பணி செய்து வந்ததால் ...ஒவ்வொரு ஆங்கில புது வருடம் பிறக்கும் போதும்..அன்று காலையில்...போன் வரும்...நான் போனை எடுக்கும் போது..கண்ணு..புத்தாண்டு வாழ்த்துக்கள்..என்னுடைய ஆசீர்வாதம்..என்று  சித்தி சகுந்தலா அம்மா வாழ்த்துச் சொல்லி ஆசிர் வதிப்பார்..நானும் பதிலுக்கு நன்றி தெரிவித்து..புத்தாண்டு வாழ்த்து சொல்லுவேன்..சித்தி உடனே அருகில் இருக்கும் சித்தப்பாவிடம்  ..இந்தாங்க ..பையன் பேசுது ...என்று போனைக் கொடுப்பார்.சித்தப்பாவும் எனக்கு என் குடும்பத்தாருக்கு... புத்தாண்டு வாழ்த்துகள்.. ப்பா என்று  சொல்லுவார்..இன்று வரை பழனியப்பன் சித்தப்பா எனக்கு ஒவ்வொரு புத்தாண்டிலும்  தவறாமல் ..புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லி வருகிறார்.........ஆனால் சித்தி சகுந்தலா அம்மா மட்டும்... டிசம்பர் 2011..க்குப் பிறகு ...வழக்கமாக எனக்கு புத்தாண்டு வாழ்த்துகள் சொல்வதை    .. ஆசிர்வதிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டார் ....அந்த சிரிப்பு முகம்...அழகு முகம்..அன்பு உள்ளம் .. தாய் மனசு...நிரந்தரமாகவே வாழ்த்து சொல்வதை .. ஆசீர்வதிப்பதை நிறுத்தி விடை பெற்று விட்டது......... தன் கையால் சமைத்த உணவை ..எங்கள் வீட்டிற்க்கு இன்று தான் வந்துள்ளாய் 
.இன்னும் சாப்பிடு ..என்று என் வயிறு நிறைய பரிமாறி. ...தன் மனம் நிறைந்து போன அந்த தாயின் உள்ளம் மீண்டும் அப்படி ..இன்னொரு முறை....எனக்கு உணவு  பரிமாறாமல் போய் விட்டது......அன்று வீட்டிற்க்கு ஒரு முறை....ஒரு ஐந்து நிமிடம் வாப்பா என்று அழைத்த   சகுந்தலா அம்மாவின் வீட்டிற்கு போகாமல் ...கடைசியாக அந்த அம்மாவின் முகத்தை பார்க்கத் தான் அவர்களின் வீட்டிற்கு   கண்ணீரோடு சென்றேன்.................................................கண் கலங்கிய சித்தப்பா கண்களை துடைத்துக் கொண்டார்....குரலை இறும்பி சரி செய்து கொண்டவர்...கண்ணு ... இதப் பாரப்பா...என்றுச் சொல்ல ஆரம்பித்தார்.... அண்ணன்  தம்பிங்க ஒன்பது பேரில்...இப்ப நான் மட்டும் தான் இருக்கிறேன் ...அந்த ஒன்பது பேரில்..நாலு பேர் முருங்கபட்டியிலும்..மீதி  ஐந்து பேர் இந்தத் தாதனூரிலும் பிறந்தோம்.அண்ணனுங்க நாலு பேருக்கும் இங்கே தான் திருமணம் நடந்தது.தாத்தா மிகவும் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார்.இங்கிருந்து நடந்தே சென்று அம்மாபேட்டை அரசு பள்ளியில் நாங்கள் படித்து வந்தோம்.இங்கு இருக்கிற இந்த காம்பவுண்ட் கேட் தான் ...MICE INDIA COMPANY.(P)Ltd... கம்பெனியின்  மெயின் கேட்....அந்த ஓட்டு வீட்டில் தான் ... பெரிய அண்ணன்...நடு அண்ணன்
சின்ன அண்ணன்... நாகப்ப அண்ணன்  தவிர....நாங்கள் ஐந்து பேரும்  பிறந்தோம்...வளர்ந்தோம்.. குடியிருந்தோம்.....இந்தக் கம்பெனியில் ஆட்டு ரோமத்தில்  ராட்டையில் நூல்  நூற்று..தறியில் கம்பளி நெய்து வட நாட்டிற்க்கு காஷ்மீர் போன்ற குளிர் பகுதிகளுக்கு இரயில் வண்டியில் ஏற்றி அனுப்ப வேண்டும்.இந்த கம்பெனியில் ஆண்களும் பெண்களும் வேலை செய்து வந்தார்கள்.உள்ளே வருபவர்களையும் வெளியே செல்பவர்களையும் சோதனை செய்து அனுப்ப வேண்டும்..தாத்தா விற்கு அதுதான் வேலை.. மூல சரக்கு வந்தால்  அதை  எண்ணி கணக்கு வைக்கணும்.இந்த வேலை போக மீதி நேரத்தில் இந்த கிணற்றை சுற்றி வெள்ளாமை செய்யணும்.ஆடு மாடுகளை பராமரிக்கணும் ...முதலாளி வந்தால் அவர் வந்து போகும் வரை பாதுகாப்பு கொடுக்கனும். நியாயம் பேச வேண்டும்  என்றால்.. ஊர் கூட்டி அரச மரத்தின் அடியில் பஞ்சாயத்து பண்ண  ஏற்பாடு செய்யணும். இங்குள்ள வீடுகளில் நல்லது கேட்டது என்றால் தாத்தா தான் முன்னின்று நடத்திக் கொடுப்பார்..இதனாலேயே தாத்தாவிற்கு இந்த ஊர்ல தனி மரியாதை தருவாங்க.இப்படி நாங்க தாத்தாவின் கஷ்ட உழைப்பில் வளர்ந்து வந்தோம் .இதைச் சொல்லிக் கொண்டு இருக்கும் போது.
. அந்தக் கிணற்றின் அருகே இருந்த மெத்தை வீட்டின் முன் நின்று இருந்த அந்தப் பெண்  தன்னுடைய குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு ...அண்ணா... நல்லா இருக்கீங்களா.. என்று சிரித்துக் கொண்டு சித்தப்பா அருகில் வந்தார்.ஆம்... நல்லா இருக்கேன் என்றார் சித்தப்பா.அந்த கம்பெனி நிலத்தை ...ஐந்தரை  ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடி சிலர் பிடித்துக்  கொண்டதாக... அந்தப் பெண் சொன்னார்.....சித்தப்பா.. தன் பிராயத்து நண்பர்களின் பெயரைச் சொல்லி..அவங்க எல்லாம் இப்போ எங்கே இருக்காங்க.
என்று விசாரித்தார்..நீங்க சொன்னவங்க எல்லாம் போய் சேர்ந்துட்டாங்க..என்று வாய் விட்டு சிரித்தார் அந்தப் பெண்.....பிறகு எங்களிடம் திரும்பியவர்...
ஒரு நாள் நாங்க ஐந்து பேரும் அம்மாபேட்டை பள்ளிக்குச் சென்று மாலையில் இரயில் ரோடு ஏறி  தாதனூர் வந்து கொண்டு இருந்த போது ..வழியில்  நின்ற மூன்று பேர் எங்களின் சிலேட்டு புத்தகப் பையை பிடுங்கி தூக்கி எறிந்து..நீங்க  யாரூட்டுப் பசங்க என்று வழி மறித்து மிரட்டினார்கள்....யார் என்று சொன்னதுக்கு ..   ஏண்டா உங்களுக்கு படிப்பு ஒரு கேடா.....என்று அருகிலிருந்த ஆவாரம்பூ செடிகளை பிடுங்கி இடுப்பு ..முகம் என்று கண் முன் என்று பாராமல் அடித்து ..இனிமே படிக்க போனீங்க ...என்று அடித்து மிரட்டி ஓடுங்கடா...இனிமே  இந்தப் பக்கம்  யாராவது வந்தீங்க ....என்று விரட்டி அடித்தார்கள் .நாங்கள்  பசியுடன்..அவர்கள் அடித்த வலியுடன்.. அழுது கொண்டே...கிழிந்து போன புத்தகப் பையை நெஞ்சில் அணைத்துக் கொண்டு...ஒவ்வொருவராக கம்பெனி கேட் முன்பாக வந்து... அங்கே நின்றுக் கொண்டு இருந்த தாத்தாவை பார்த்து பயந்து..தயங்கி நின்றோம்.

இந்தப் ...பயப் பிள்ளைகளுக்கு என்னால ஆச்சு..நோவுக் கோழி மாதிரி நொண்டிகிட்டு வரானுங்க...    ஏலே...என்னாலே ஆச்சு...   சொல்லுங்களே..பள்ளி கூட்டத்திலே ஏதாவது ..     எகட கூடமா பண்ணிப் புட்டியலா...தாத்தா கத்தினார்.  நடந்த வற்றை அழுது கொண்டே சொன்னோம்.. யாருங்கடி ..என் பய மக்களை அடித்தது...அவுங்க யாருன்னு உங்களுக்குத் தெரியுமா...சொல்லுங்க என்று தாத்தா ...கோபத்தோடு மீண்டும் கத்தினார்.தாத்தாவின் குரல் கேட்டு .. ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டு இருந்த ஆயாக்கள் இருவரும்..என்னவோ .. ஏதோ என்று தறிக்  கொட்டகையில் இருந்து வெளியே வந்து பார்த்தார்கள்.எங்களின் கைகளிலும் தோள் பட்டையிலும் ..இடுப்பிலும்  கன்னிப் போன கறுத்து   இருந்த  தடிப்புகளைப் பார்த்து ..யாரு உங்களை அடித்தவர்கள் என்று...அதிர்ச்சி அடைந்துப் போனார்கள்.அவுங்க யாருன்னு எங்களுக்குத் தெரியாது ..இரயில் ரோட்டு மேடு ஏறி வரும் போது...படிக்க போகக் கூடாது என்று அடித்தார்கள் என்று...நாங்கள் மெது மெதுவாய் சொன்னோம் .எங்களின் கண்களை முந்தானையால் துடைத்த ஆயாக்களின் கரங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டோம்.அவுங்க ..உங்களுக்கு  யாருன்னு தெரியாதா..என்று தாத்தா...எங்களின் கண்களை ஊடுறுவிப் பார்த்தார்... ஈ.. இக் ...கும் ..அவுங்க யாருன்னு தெரியாது...என்று நாங்கள் தலை ஆட்டினோம்...தாத்தா..கிணற்றின் அருகே இருந்த ... கிணற்று பூண்டு தலைகளை பறித்து .. கைகளில் வைத்து கசக்கி ஆவாரம் பூ விலாறால் அடிபட்ட காயங்களில் . சொட்டுச் சொட்டாக ஊற்றி...சரி போங்க என்றார்...நாங்கள் சாப்பிட்டு தூங்கச் சென்று விட்டோம்..... அந்த பஞ்சாயத்து அரச மரத்தில் இருந்து ...ஊரில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் ...பக்கத்தில் இருக்கும் ... மணியகாரர் குடியிருப்பு தெரு  வரையிலும்......தாத்தாவின் குரல் இரவை கிழித்துக் கொண்டு ஒலித்தது....நாளைக்கு காலை ஒன்பது மணிக்கு அரசமர  பஞ்சாயத்து...தவறாமல் எல்லாரும்  கலந்துகணும்.இது தாதனூர் மக்கள் சம்பந்தப் பட்டது...தவறாமல் வாங்க...என்று கையில் இருந்த ஆறு அடி நீள கெட்டி மூங்கில் தடியை தரையில் அடித்து ...செய்தி சொல்லி...எப்போது வந்து வாசலில் கிடந்த கட்டிலில் தாத்தா படுத்தார் என்று எங்களுக்குத் தெரியாது என்றார் சித்தப்பா....அவர் சொல்வதை கேட்டுக் கொண்டே மெயின் ரோடு நோக்கி நடந்து வந்த எங்களைப் பார்த்து ஒருவர் ....வேகமாக அருகில் வந்து..சித்தப்பாவை பார்த்து...நீங்க...குழந்தை ..                 மாதப்பனின் தம்பி தானே என்றார்...ஆமாங்க..நீங்க....சித்தப்பா கேட்டார்.......அவர்கள் இருவரும் பேசுவதை கேட்க எங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது ........நான் குழந்தை மாதப் பனின் நண்பன்.அந்த தெற்க்கு காடு தான் எங்களது..... நான் ஸ்பின்னிங் மில்லுக்கு  வேலைக்குப் போனேன்.உங்களை...உங்க அப்பாவை..                                அண்ணன்களை..தம்பிகளை நன்றாகத் தெரியும் என்றார்......ஒருமுறை...இருபது வருடத்துக்கு மேல இருக்கும்..அஸ்தம் பட்டியில் உங்க அண்ணன்                 மாதப்பனை பார்த்தேன்.அரசு வேலையில் இருப்பதாகவும்..பையன்களை வக்கீல்...டாக்டர் என்று படிக்க வைத்து இருப்பதாகவும்..நீங்க எல்லாரும் படித்து வேலையில் இருப்பதாகவும் சொன்னார்.எனக்கு ரொம்ப சந்தோசம் ஏற்பட்டது..உங்க அப்பா..ரொம்ப கஷ்டப்பட்டு உங்களை படிக்க வைத்தார். நீங்க ஒவ்வொருத்தரும் புத்தகப் பையை தூக்கிக் கொண்டு எங்கள் காட்டு வரப்பு வழியாக  ..தலை முடியை படிய வாரி....வரிசையா போவீங்க.. பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.எங்க தாத்தாவும். ..உங்களைப் போல படிக்கச் சொல்லுவார்.எனக்கு சரியா படிப்பு வரல..அது தான் மில்லுக்கு வேலைக்கு  போனேன் என்றவர்....இவுங்க யாரு என்று எங்களை பார்த்தார் .. சித்தப்பா சொன்னார்......இவர் என் மகன்..இது என் மருமகள் என்றார்.என் பெரிய  அண்ணன்  மகன் என்றார்.அப்படியா..இது உங்க மிலிட்டரி அண்ணன் மகனா..ஆகா..என்ன ஒரு ஆச்சரியம்...அறுபது வருடத்துக்கு பிறகு உங்களை யெல்லாம் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கு..உங்க மிலிட்டரி  அண்ணன்  கல்யாணம் இங்க தாதனூரில் தான் நடந்தது..முதல் கல்யாணம் என்பதால் உங்க அப்பா மிகச் சிறப்பாக நடத்தினார். பொண்ணு..மாப்பிள்ளை கல்யாண ஊர்வலம் எங்கத் தெருவில்  ஆரம்பித்தப் பிறகு தான் ..உங்கத் தெருவிற்கு வந்தது.. எங்கப் பாட்டி .. ஆராத்தி எடுத்து ஆசீர்வாதம் செய்தார்.எனக்கு நன்றாக ஞியாபகம் இருக்கு என்று....மிலிட்டரி காரர் மகனா என்று எங்களை மீண்டும் ஆழ்ந்து பார்த்தார் அவர்....நான் அவரை ...கை எடுத்துக் கும்பிட்டேன். அட.. டா ..உங்க குடும்பத்து...அந்த மரியாதை   அப்படியே இன்னும் இருக்கு...என்று மகிழ்ந்தார்.எங்களிடம் விடை பெறும்போது சொன்னார்....உங்க குடும்பத்தை நினைக்கும் போதெல்லாம் எனக்கு சிறு வயதில் படித்த ஒரு பாட்டுதான் நினைவுக்கு வரும் என்றார்.....கற்கை நன்றே.. கற்கை நன்றே ....பிச்சைப்  புகினும்  கற்கை நன்றே......அது அவ்வையார் பாடிய பாட்டு........அடுத்த நாள் காலையில் அந்த அரச மரத்தடியில் பஞ்சாயத்து கூடியது..அந்தப் பகுதி முக்கியஸ்தர்கள்...ஊர் மணியகாரர்.. தாதனூர் கிராமத்து மக்கள்..அக்கம் பக்கத்தில் உள்ள பண்ணையக் காரர்கள் வந்து இருந்தார்கள்
நம் தாத்தா...தலையில் இருந்த தலைப்பாகையை கழற்றி உதறி.. இடிப்பில் கட்டி முடிச்சை  வயறுக்கு முன் போட்டு...கையில் இருந்த நீண்ட மூங்கில் தடியை பஞ்சாயத்தார் முன் தரையில் போட்டு...நீண்டு   கவிழ்ந்து படுத்துக் கொண்டார்....நான்           சொல்லுவதெல்லாம் ...சத்தியம்.. உண்மை...என்றார் தாத்தா.. ம்..சரி.           பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறீங்க..நடந்த விசயம் என்ன...உங்க குறை என்ன..சொல்லுங்க... மணியக் காரார் கேட்டார்... பள்ளி கூட்டத்துக்கு போய்ட்டு வந்த என் பிள்ளைகளை.. நீங்களெல்லாம்  படிக்கச் கூடாது..என்று புத்தகப் பையை பிடுங்கி எறிந்து...ஆவாரம் விழுதால...சின்னப் பசங்க 
.ன்னு பார்க்காம அடிச்சு விரட்டி அவமானப் படுத்தி இருக்கிறாங்க.அவுங்க யாருன்னு பசங்களுக்கு தெரியல..அவுங்கள பஞ்சாயத்து கண்டு பிடித்து தரணும்.என் பிள்ளைகளை நான் கஷ்டப் பட்டு படிக்க வைக்கிறேன்.இதில் யாருக்கு என்ன கஷ்டம்..இதற்க்கு பதில் சொன்னால் தான் நான் தரையில் இருந்து எழுவேன்..என்று தாத்தா            வேண்டுகோள் வைத்தார். .அங்கிருந்தவர்கள்.. அடப் பாவமே..அந்தப் பிள்ளைகள் போவதும் தெரியாது ..வருவதும் தெரியாது..யாருப்பா அது.. வாயில்லாத சின்னப் பசங்களை அடித்தது.. இப்படி அசிங்கப் படுத்தியது... கூட்டத்தில் இருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.....இந்த அறியாப் பசங்களை இப்படி அடிச்சவங்க        யாராயிருந்தாலும் சரி.. உள்ளூரா இருந்தாலும் சரி.. வெளி ஊரா இருந்தாலும் சரி..இங்க விருந்தாடியா வந்து இருந்தாலும் சரி... யாருண்ணு தெரியணும் .அதுக்கு உண்டான பரிகாரத்தை செய்யணும்.இல்லன்னா..படுத்து இருக்கிற ஆறுமுகம் எழுந்திரிக்க மாட்டாரு.அவரு தரையை விட்டு எழுந் திரிக்க வில்லை என்றால்.. நாம வீட்டுக்கு போக முடியாது.இது ஊரு கட்டுப்பாடு...பஞ்சாயத்தார் சொன்னபோது... அந்த இடமே அமைதியாக இருந்தது. ஒரு மணி நேரம் ஆனது..இரண்டு மணி...மூன்று மணி....மதியம் பன்னிரெண்டு மணி...யாரும் எதுவும் சொல்ல வில்லை.ஆறுமுகம் தாத்தா ஆடாமல் அசையாமல் கவிழ்ந்து படுத்துக் கிடந்தார்.....அரச மரம்... ஆ. ஆ.என்று தலை சிலிர்த்து .. இலை உதிர்த்து.....அடிக்கும் காற்றுடன் கைக் கோர்த்து.. களி நடனம் புரிந்து கொண்டு இருந்தது.............ம் 
.யாருப்பா அது..நேரம் ஆச்சுஇல்ல ..சொல்லுங்க என்று .. மணியக்காரர் ஒவ்வொருவடைய முகத்தையும் பார்த்தார்.....மணி மூன்று...கூட்டத்தைக் விலக்கிக் கொண்டு ..என்ன இங்கே என்று ...மூன்று பேர் ...கையில் நொங்கு குலையுடன் நுழைந்தார்கள்.விசயத்தை அறிந்ததும்...மூவரும் தலைக்கு மேலே கை எடுத்து கும்பிட்டு... ஐயா..நாங்க தான் நேத்து..விளையாட்டுக்கு அப்படி பண்ணினோம்.எங்களை               மன்னிச்சிடுங்க ..சும்மா விளையாட்டுக்கு பண்ணினோம்.. வினையாப் போச்சு .. எங்களால்..பெரிய மனுசங்க நீங்க எல்லாம் காலைல இருந்து ...தண்ணிக் கூட குடிக்காமல் ..காத்து கிடக்குறீங்க ... சாமி...எங்களை மன்னிச்சிடுங்க  ..இனி அப்படி செய்ய மாட்டோம்......தாத்தா விரூட் டென  வேகமாக எழுந்தார்..நீங்க எந்த ஊரு ..இங்க எதுக்கு வந்தீங்க என்றார்.பண்ணயில வேலைத் தேடி வருகிறோம்.....வெளி ஊரு என்றார்கள்.....அவர்கள் பண்ணை யத்துக்கு வேலை தேடி வந்தவர்கள் என்றுச் சொன்னதும்.. கோபத்தோடு நின்றத் தாத்தா...அவர்களை                   பாவத்தோடு  பார்த்தார்...........சரி.....இதுக்கு தண்டனை...என்று பஞ்சாயத்தார் சொல்ல வந்த போது... தப்பு..          மன்னிச்சுடுங்க...என்று சொன்னபோது...தண்டனை எதுக்கு என்று ...தாத்தா பஞ்சாயத்தாரைப் பார்த்து தலை வணங்கினார்.பஞ்சாயத்து கலைந்தது.... தாத்தாவின் செயல் பாட்டைக் கேட்டு நாங்கள் வியந்து போனோம்......அப்புறம் ப்பா..என்று சித்தப்பா மேலும் சொல்ல ஆரம்பித்தார்.....அந்த மைஸ் இந்தியா கம்பனி முதலாளி ..கம்பளி தயாரிப்பதை நிறுத்தி விட முடிவு செய்தார்.அரிசிபாளை யம்..ஆண்டிபட்டி...ஆகிய இடங்களில் இருந்த கம்பெனிகளை  இழுத்து மூடி விட்டு....கல்வி சார்ந்த தொழிலில் 
 ஈடுபட ஆரம்பித்தார்.இதனால் பலருக்கு வேலையும்  வருமானமும் இல்லாமல் போனது....பதினெட்டு ஆண்டுகள் தாத்தா அந்த மைஸ் இந்தியா கம்பெனியில் பணியாற்றி..முதலாளியின் நம்பகமான .. உண்மை ஊழியனாக.... வலது கையாக ... விளங்கியதால்...அந்த தாதனூர் கம்பனி பொருள்களை விற்று விட்டு..கம்பெனி இருந்த  ஐந்தரை  ஏக்கர்  நிலத்தை இலவசமாக தாத்தாவுக்கு கொடுக்க முன் வந்தார் முதலாளி ... உன்னுடைய   பதினோரு பிள்ளைகளை வளர்ப்பதற்கு இந்த நிலம் போதும் ...பத்திரம் எழுதி தருகிறேன் என்று முதலாளி சொன்னபோது ...தாத்தா விற்க்கு வந்தது பார் கோபம்..அடடா... அப்படியே கையில் இருந்த மூங்கில் தடியை தூக்கி எறிந்து விட்டு...      முதலாளியை நோக்கி... தாத்தா சொன்னார்....      எஜமான்..ஆண்டிபட்டியில்  என் மாமனார் வீட்டில் இருந்த என்னை இங்கே தாதனூருக்கு .. கூட்டி வந்து...இந்த கம்பெனில வேலை கொடுத்து..கூலிக் கொடுத்து... .பதினெட்டு வருசமா.. என்னை..என் குடும்பத்தை ..காப்பாத்தி வந்தீங்க...இப்ப(1963) ..என் பொண்டாட்டி  புள்ளைகளோடு இந்த நிலத்தை வைத்து பொழச்சிக்க.
என்று சொல்றீங்க ..பசங்க எல்லாம் படிக்கிறாங்க...பாதில படிப்பை நிறுத்தி இந்த நிலத்து பண்ணையத்தில் போட்டால்...அவுங்க படிப்பு...இவ்வளவு நாள் படித்தது...வீணாகிப் போயிடும்...படிக்கிற பசங்க படிக் கணும்...எம் பிள்ளைங்க எல்லாம் படித்து..பேனா பிடித்து எழுத்து  வேலைக்கு போகனும் ...பாதி படிப்பு படிச்சிட்டாங்க .. மீதியை  அவுங்க படிகட்டும்..இனி நீங்க இல்லாம எனக்கு என்ன வேலை இங்கே...நான் என் குடும்பத்தோடு வந்த இடத்திற்கே போகிறேன் என்று.தாத்தா இடுப்பில் கட்டியிருந்த துண்டை உதறி  தோளில் போட்டார்... முதலாளியின் முன் குனிந்து நின்ற தாத்தா நிமிர்ந்து நின்றார்.....தான் குடி இருந்த ஓட்டு வீட்டை பிரித்து இரண்டு மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு இரவோடு இரவாக...மாமனார் ஊரான ஆண்டிபட்டி வந்து சேர்ந்தார் தாத்தா.அப்படி கொண்டு வந்த            மூங்கில். ஓடு ஆகியவைகளை கொண்டு தன் நிலத்தில் வீடு கட்டி தன் பிள்ளைகளுக்கு படிப்பைத் தொடர்ந்தார்.........சேர்வராயன் மலைத்தொடரில் இருந்து ...சில்லென்ற காற்று வீசத் தொடங்கியது... மழைத் துளி அங்கும் இங்குமாக விழ ஆரம்பித்தது.காரில் நுழைந்த நாங்கள் பழனியப்பன் சித்தப்பாவை அவரின் மணக்காடு வீட்டில் இறக்கி விட்டு திரும்பும் போது ...அவர் வளர்த்து வரும் செல்ல நாய் இரண்டு முன் கால்களையும் தூக்கி சேர்த்து வணக்கம் சொன்னது.வீட்டில் அந்த நாய் தான் சித்தப்பாவுக்கு  துணை .நாங்கள்    விடைபெறும் போது  ..அடிக்கடி வாங்கப்பா...வந்து ...போங்கப்பா என்றார்...அவரின் கண்களில் தனிமை தெரிந்தது....எங்கள் வீடு வந்து காரின் கதவைத் திறந்து....தரையில் காலை வைக்கும் போது...தாத்தா சொன்ன அந்த வைர வாக்கியம்........என் பிள்ளைகள் இந்த நிலத்தை..இந்த மண்ணை உழுது வாழ்வதை விட.. பேனா பிடித்து எழுதி வாழ்வதையே விரும்புகிறேன் என்று...ஐந்தரை  ஏக்கர் நிலத்தை... இலவசமாக வந்த ...முதலாளி தந்த நிலத்தை...அந்த மண்ணை வேண்டாம்.. என்று மறுத்து..படிப்புத்தான் வேண்டும்...கல்வி தான் வேண்டும்..என்று .. தன் வாரிசுகளுக்கு கல்வி கண்ணை திறந்த ஆறுமுக தாத்தாவின் குரல் காதில் விழுகிறது.
29.06.2025....." சேலம் வசந்த் '"




.





Comments

Popular posts from this blog

ஆத்மா

ராகம்

நாராயணி கண்ணகி.