ஜூன் மாதம்

ஜூன் மாதம் வந்தாலே ஒரு சுறுசுறுப்பு வந்து விடுகிறது ..........சுழன்று அடிக்கும் சூறாவளி காற்றும்...சூழ்ந்து கொள்ளும் பருவ அடை மழையும்...சுறுசுறுப்பாய் பள்ளித் திறப்பும் ..மாணவர்களின் அணி வகுப்பும் ...திணறிப் போகும் டிராபிக்கும் ...திருமண நிகழ்வுகளும்..ஒரு புது வருட ஆரம்பம் போல...இந்த மாதத்தில்... வளர் பிறை வைகாசியில்..வரிசையில் வந்து. வா வென்று வரவேற்கும்...................கோடை வெயிலில் ..கோயில் ...குளம்.. தேர்த் திருவிழா.. திருக்கல்யாண   உற்சவம் ....குற்றாலம்..குளிர்ச்சியான நீர் வீழ்ச்சி..குவிந்து கிடக்கும் நிழல் நிறைந்த புங்கா.. குளிர் பானம்.....மாங்கனி.. பழச் சாறு....மணம் வீசும் மலர்த் தோட்டம்...என தேடித் தேடி...உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு மகிழ்வான சுகம் காண       அலைந்து திரிந்த சூழ்நிலை மாறி... பிள்ளையார் சுழி போட்டு மீண்டும் அவரவர் வேலையைத் தொடரும் நேரமாக  மாறும்....இந்த ஜுன் மாதம்..உள்ளத்திற்கு உற்சாகத்தையும்...உடலுக்கு இதமான சுகத்தையும் தரும் சூழலில் நகர்ந்தாலும்...கோடை  வெப்பத்தின் தாக்குதலில் இருந்து...பருவ மழைக்கான பருவ நிலையில்..... ஒரு சில பரிதாபமான நிகழ்வுகளையும் தவறாமல் தந்து விடுகிறது...அப்படி வரும் நிகழ்வுகள்.....இன்பம் துன்பம்..மகிழ்ச்சி இகிழ்ச்சி..விருப்பம் ...வெறுப்பு....வரவு செலவு...வெற்றி தோல்வி..சோகம் துயரம்...இப்படி இரட்டை எதிர் விளைவுகளை ஏற்படுத்தி ...மனதை.... நினைவை...தவிக்க விட்டு தள்ளாடச் செய்து விடுகின்றன . .இதில் மகிழ்வான நிகழ்வுகளைத் தாங்கிக் கொள்ளும் இதயம்... மீள முடியாத இழப்புகளை ...தாங்கிக் கொள்ள முடிவதில்லை .பிரிந்து போனது போனதுதான்..இனி மீண்டும் வரப்போவதில்லை ..என்பதை உணரும் பொழுது ..உள்ளம் உடைந்துப் போகிறது.அதன் வெளிப் பாடு கண்களின் கண்ணீர்  தான். அப்பொழுது கண்களில் ஊறும் கண்ணீர் ...ஒரு ஊற்றாக...ஒரு அருவியாக..ஒரு ஓடையாக...ஒரு ஆறாக..ஒரு நதியாக பெருக்கெடுத்து தொடர்ந்து நாட்கணக்கில் ஓடிக் கொண்டே இருக்கும் ................காலம்   முழுதும்   .. ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகவே அந்த நிகழ்வு இருந்துக் கொண்டு தான் இருக்கும்....................அந்த.............. மே மாதத்தில்....... பெங்களூர் இரயில் சந்திப்பு ... மெஜஸ்டிக் முன் இருந்த .....சிஸ்டம் டெக்னிகல் ஸ்கூலில் .....         தியரிடிக்கல்  ட்ரைனிங் .......மே 06 யில் இருந்து நவம்பர் 06 வரை ...ஆறு மாதம் பயிற்சி பெற சென்னையில் இருந்து வந்து அதன் ஹாஸ்டலில் தங்கினேன். .............அந்த STS பயிற்சி நிலையம் .... ஆங்கிலேய ஆட்சி காலத்தில்..கருங்கற்களால் கட்டப்பட்ட உயரமான கட்டிடம் கொண்டு ஒரு பெரிய....பெரிய வளர்ந்த அரச மரங்களைப் போல அகன்று விசாலமாகக் காணப்பட்டது. அந்தப் பயிற்சி நிலையத்தின் பின் புறம் தனித் தனியாக இரண்டு மாடி கொண்ட பல அறைகளைக் கொண்ட பங்களா டைப் வீடுகளில் எங்களுக்கு ...தங்குவதற்கு நான்கு பேருக்கு ஒரு அறை என ...தமிழ் நாடு... கேரளா..கர்நாடகா.. ஆந்திரா....ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு...ஒதுக்கப் பட்டது.....சமைப்பதற்காக கீழே இருந்த ஒரு வீடே வழங்கப் பட்டு இருந்தது.அதில்  சமையல்காரார்..திரு .பாலன் நாயர் அவர்கள்.....இவர் ஒரு ஆல் இன் ஆல் மாஸ்டர்...அதிகம் படிக்காதவர்...சமையலில் பட்டம் வாங்காதவர் ...சுவையாகவும் ...சுகாதாரமாகவும்...சிக்கனமாகவும் சமைப்பதில்...இவருக்கு டாக்டரேட் கொடுக்கலாம்.இவரின் சமையலின்  கைப்பதம் இவர் சமைத்த உணவுகளை சுவைத்து  உண்ணும் போது தான் தெரியும்.வாய் மணக்கும்... கை மணக்கும்...வழி எல்லாம் மணக்கும்..வந்து அமர்ந்து பின்னர் வகுப்பரையே மண மணக்கும்.......யாருக்காவது....   எவ்வளவு சாப்பிட்டும் உடம்பில் சதை பிடிக்க வில்லையா..இவர் சமைத்த உணவு கொடுத்தால் போதும்...இன்னும் கேட்டு வாங்கி ...வாங்கிச் சாப்பிட்டு உடல் குப் எனத்  தேறி விடுவார்கள்.....அந்தப் பயிற்சி நிலையத்திற்கு ...பக்குவமாக சமைக்கும் இந்த மாஸ்டர்  பாலன் ஒரு வரப் பிரசாதம்....ஒரே வாரத்தில் ...இங்கு வருபவர்களுக்கு  இரண்டு கன்னங்களும் புசு ...புசு  வென உப்பி ஒரு பள பளப்பை கொண்டு வந்து விடும். இடுப்பு பெல்ட்டினை  லூஸ் செய்து போட வேண்டி வரும் ..சமையலின் தரமும்...சுவையும் மணமும் வேற லெவலில் இருக்கும்.இந்த சமையல் மாஸ்டர் பாலன் ...அன்போடு பேசுவார்.. அளவோடு பேசுவார்..ஒவ்வொருவரின் வயிரின் அளவு அறிந்து உணவு பரிமாறுவார்...மிச்சம் மீதி வீணாகாமல் கவனத்துடன் கையாழுவார்...எங்கள் பணம்...எங்கள் தேவை..எங்கள் செலவு ...சமபங்கு என்ற அடிப்படையில் உணவு வழங்கும் விதம் ....அங்கே....சிக்கனமாக இருக்கும்..சிறப்பாகவும் இருக்கும்...இங்கு உள்ள கருங்கல்  கட்டிடங்களைச் சுற்றிலும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்த... படர்ந்த...வாகை மரங்கள் ... நிழலை நிரப்பிய வண்ணம் நிமிர்ந்து நிற்கும்...அந்த மர நிழல்கள் விழும் மண்ணும் குளிரும்...மரங்களின் உச்சியை பார்க்கும் போது கண்ணும் குளிரும்..சற்று இடை வெளியில் மரங்களின் உடம்பைச் சுற்றி குண்டு குண்டாக தொங்கிக் கொண்டிருக்கும் பலாப் பழ காய்கள்...எப்போ கீழே விழும் என... ஆசையைத் தூண்டும்....இன்னும் கொஞ்சம் தூரத்தில் இருக்கும் எழந்தை மரத்தில் இருந்து வரும் பழத்தின் வாசம் ...வாயில் எச்சிலை ஊற வைக்கும்....இப்பயிற்சிப் பள்ளி.... இரயில் எஞ்சினின் சத்தம்...மெஜஸ்டிக்கில் இருந்து பேருந்து புறப்படும் சத்தம்... தவிர ஒரு அமைதியான சூழல் கொண்ட....அனைவரும் விரும்பித்   தங்கும் அருமையான இடம்..........இந்தப் பயிற்சிப் பள்ளி யின் பிரின்சிபால் திரு.TPVSS.ராவ்...IRSME...இவர் அதிகமாக தலையில் முடி வைத்துக் கொள்வதில்லை..ஒரு அரை அங்குலம் முடிக்கு மேல் வளர விட மாட்டார்.நல்ல உயரம்...எடுப்பான நாசி..இவர் பேசும் போது உதடுகள் மட்டும் அசையும்..உடலில் வேறு எதுவும் அசையாது.அவர் சிரித்ததையோ...சந்தோசப்பட்டதையோ ...துள்ளலான உற்சாகத்தையோ... யாராவது பார்த்து இருந்தால் அவர் அதிர்ஷ்ட சாலி எனலாம். ....ரொம்ப.. ரொம்ப.. ஸ்ட்ரிட்....ஆபீசர்....அந்த அலுவலக கட்டடத்தின் முன் கிடக்கும் அகன்ற மர நிழலின் கீழே... தினம் நடக்கும் காலை பிரேயரில்..08.20 க்கு அடிக்கும் பெல் முடியும் முன்னே... முன்னால் வந்து நின்று விடுவார் பிரின்சிபால் அவர்கள்..அவரைத் தொடர்ந்து...திரு.A.J. அருள்தாஸ்...AMIE... Mechanical Instructor....அடுத்து ..திரு.சுந்தர ராஜன்... Senior lucturar .. திரு.N.P. கிருஷ்ணன்...ME., senior lucturar...இன்னும் பிற instructor .. களும் கழுத்தில் டை அணிந்து பகட்டாக வருவார்கள்.முதலாவதாக ... கடவுள் வாழ்த்து...அந்தப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிப் பெறும்  ஒவ்வொருவரும் ஒரு பக்திப் பாடல் அவரவர் மொழியில் பாடவேண்டும்..ஒரு டீசல் எஞ்சின் உதவி டிரைவர்...ஒரு பக்தி பாடலைப் பாடினார்...... சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே..உன்னை ஜீவித்தக் கரங்களுக்கு ஏது பயமே...என்று அவர் அன்று 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாடிய அந்தப் பாடல்...இன்றும்....இன்னும் என் நினைவில் நின்றுப் பாடுகிறது... அப்படி ஒவ்வொரு நாள் காலையும் ஒருவர் பாட வேண்டும்.என் முறை வந்த போது...எனக்கு பாடத் தெரியாது.. இசையை நன்றாய் ரசிப்பேன்...பாடல்கள் பாடும் போது..   நானும் கூடவே கொஞ்சம்  பாடுவேன்..என் ராகம் வேறு விதமாக இருக்கும்.உடனே நிறுத்திக் கொள்வேன் ......என்ன செய்வது..இன்று நான் பாடியாக வேண்டும்...குரலை ஒரு முறை கனைத்து சரி செய்து....பாடினேன்.......உலகம் யாவையும் தாமுல வாக்கலும்.. நிலை  பெறுத்தலும்.. நீக்கலும் நீங்கலா .. அலகிலா விளையாட்டுடை யாரவர் தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே...என்று ...ஒன்பதாவது படிக்கும் போது...தமிழ் பாடத்தில் வரும் கடவுள் வாழ்த்து... கம்ப இராமாயணத்தின் முதல் பாடலை...படித்தேன்...என்னிடம் அருமையான தமிழ் பாடல் வரும் என்று எதிர் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துப் போனார்கள்.அப்போது தான் பிரின்சிபால்...திரு.ராவ்...what is.....this ..என்று மெல்லச் சிரித்தார்.இந்தப் பாடல் எதில் வருகிறது என்றுக் கேட்டார். கம்ப இராமாயணம் என்றதும்...தலையை ஆட்டி நன்றாகவேச் சிரித்தார்... எல்லோரும் சிரித்தார்கள் ..நானும் சிரித்தேன். பாடத் தெரியாதவர்கள் இனிப் பாட வேண்டாம் என்று உடனடியாக உத்தரவு போட்டார்..இதனால் நிறையப் பேர் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.இனிப் பாடத் தெரியாதவர்கள் பாடத் தேவையில்லை.அதன் பிறகு நன்றாகப் பாடத் தெரிந்தவர்கள் தொடர்ந்து பாட ஆரம்பித்தார்கள்.அப்படி அவர்கள் பாடிய அந்த பக்தி பாடல்கள் நிறைய இன்றும் நினைவுக்கு வருகின்றன......ஹாஸ்டலில்...எங்கள் அறையில்...                          நான்..சேலத்தில் இருந்து .. இராம சுப்ரமணியன்...தாம்பரத்தில் இருந்து ...   இரவீந்திரன் கோவையில் இருந்து ...மோகன்ராம் புரசைவாக்கத்தில் இருந்து .....என மெட்ராஸ் டிவிஷன் பயிற்சி train Examinar ....ஆகிய நாங்கள் தங்கி இருந்தோம்.  காலையில் ஒன்பது மணியில் இருந்து....மாலை நாலரை மணிக்கு மேலும் ...வகுப்பு இழுத்துக் கொண்டுப் போனது..இதனால் நண்பர் பாலன் மாலையில் செய்து வைத்து இருக்கும் ஸ்நாக்ஸ் காய்ந்து போய்விடும்..அல்லது .காலி ஆகி விடும்...இரவு உணவு எட்டு மணி வரை காத்துக் கொண்டு இருக்க வேண்டும்.. பசி தாங்க முடியாத நிலையில் வெளியே மெஜஸ்டிக் பேருந்து நிலையம் சென்று ஏதாவது சாப்பிட வேண்டும்.வலது பக்க வளைவில் பக்கத்தில் இருக்கும் ஹோட்டல் பாலாஜியில் சூடாக மசால் தோசை சாப்பிடலாம் ... ஹோம் வொர்க் முடித்து கண் மூடும் போது  இரவு   பதினோரு மணி ஆகிவிடும்.ஆனால் எதைப் பற்றியும் கவலைப் படாமல் எட்டரை  மணிக்கே கண் மீது மெல்லிய துண்டைப் போர்த்தி குறட்டை விட்டு தூங்கி விடுவார் நண்பர் மோகன் ராம் அவர்கள்.காலையில் எழுந்து...அவரின் வேலைகளை நண்பர் இராம சுப்ரமணியன் முடித்துக் கொடுப்பார்.......அன்று வகுப்பில் ...அருள்தாஸ் ...சார் சொன்னது எங்களுக்கு .. என்ன செய்வது என்றே தெரியாமல் தடுமாறிப் போகச் செய்தது.. ....வருகிற வெள்ளிக் கிழமை மாலை ஆடிட்டோரியத்தில் ....யூத்  டே..  செலி பிரேட்  செய்ய இருக்கிறோம்... சதரன் இரயில்வேயில் உள்ள ஒவ்வொரு டிவிஷனும் ஒரு புரோகிராம் செய்ய வேண்டும்...இது பிரின்சிபால் உத்தரவு..................வகுப்பில் இருந்து வந்ததும் குஷன் மெத்தையில் மல்லாக்க படுத்து கொசு வலையை சுற்றி வளைத்து  விட்டு ஓய்வு எடுக்கும் நண்பர் மோகன்ராம்.... வகுப்பிலேயே சொல்லி விட்டார்...எனக்கு ஒன்றும் தெரியாது ..என்னை விட்டுடுங்க 
. நீங்க புரோகிராம் செய்யுங்க என்றார்.இன்று திங்கள் கிழமை... யூத் டே நடக்கும் வெள்ளிக் கிழமைக்கு ..இன்னும் மூன்று நாள் இருக்கு ...என்ன நாம் செய்வது...நாங்கள் யோசித்தோம்.நண்பர்கள் ரவிந்திர னும்.. இராமசுப்ரமணியனும்  ..எங்களுக்கு எந்த அனுபவமும் இப்படி புரோகிராம் செய்வதில் இல்லை....என்று கை விரித்தனர்....என்ன செய்ய ..யோசித்தேன் .மெட்ராஸ் டிவிஷன் ஓபன் லைன் எதையும் செய்யாவிட்டால்... அசிங்கமாகப் போய்விடும்... மதுரை டிவிஷன் நண்பர் முத்துசாமி...திருச்சி டிவிஷன் நண்பர் ராஜா ..ஆகியோரை  நடிக்க வைத்து  ஒரு ஐந்து நிமிட நாடகம்.. காபி ஒரு காப்பி  .. என்றத்  தலைப்பில் தயார் செய்தேன்..... நான் படித்தது..பார்த்தது..கேட்டது இவைகளை வைத்து ...வசனம் எழுதி அவர்கள் இருவரையும் ரிகர்சல் கொடுத்து தயார் செய்தேன்.உலக இளைஞர் தினம் ..என்பதன் தேவை.. மார்க்கம்..கடைமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மூன்று நிமிடம் படிக்கும் ஒரு கவிதையை எழுதி தயார் செய்துக் கொண்டேன்...... .............ஜூன் மாதம் 7ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை...STS அரங்கில். பெங்களூர் டிவிஷன்..... டிவிசனல் இரயில்வே மேனேஜர்... அவரின் துணைவியார்..மற்றும் பிற அதிகாரிகள் குடும்பத்துடன் வந்து
. ...நிரம்பி எங்களின் யூத் டே கலை நிகழ்ச்சியை காண ஆர்வத்துடன் காத்துக்  கொண்டு இருந்தார்கள்....கன்னடம்..தெலுங்கு...மலையாளம்...ஹிந்தி. போன்ற மொழிகளிலும் ஒவ்வொரு டிவிசனுக்கும் வாய்ப்பு வழங்கப் பட்டது.அதில் பாடல் பாடுதல்..கவிதை வாசித்தல்..மோனோ ஆக்டிங்... டான்ஸ்... மிமிக்கரி... டிராமா என நிகழ்ச்சிகள் நடந்தன ....கடைசியாக .. அரை மணி நேரத்திற்குப் பிறகு..எங்களுக்கு வாய்ப்பு வழங்கப் பட்டது.எங்களின் ...காபி ஒரு காபி.. நாடகம் நடத்தப் பட்டது.இந்த ஐந்து நிமிட நாடகத்தில் மேட்டூர் அணை..
அண்ணன் திரு.KR. செல்லதுரை...பிஎஸ்சி...இந்தியன் வங்கி மேனேஜர் அவர்களின்...நாடகமான ..கண்ணே காத்தாயி...என்ற நகைச்சுவை நாடகத்தில் இருந்த வசனத்தை.... பயன் படுத்தி இருந்தேன்.........அது...வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே வந்தவர்... வீட்டு ஓனரைப் பார்த்துக் கேட்கிறார்... அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்...என்ன சந்தேகம் எலிக்கு எந்தப் பக்கம் வாலுன்னா ... இல்ல அண்ணே உங்க வீட்டுக் கேட்டைத் திறந்து உள்ளே வந்தேன்னா... உங்க நாய் என்னமா பாயுது... அடடா..அதுக்கு என்ன... அது தான் சந்தேகம்.. என்ன சந்தேகம் சொல்லித் தொலை.... உங்க நாய்க்கு .. சோறு போட்டு   வளர்த்தரேளா ....இல்ல பழைய வெஸ்ட்டி சட்டை போட்டு வளர்த்தரேளா..என் துணிய எல்லாம் பிராண்டித் தின்னுடுத்துப் போங்கோ... தோளு மேலே போட்டு இருந்த துண்டை போர்த்தி வந்து இருக்கேன் பாருங்கோ....என்று வெறும் உடம்பைக் காட்டுகிறார்........இந்த வசனம் பேசும் போது...அரங்கம் முழுக்க சிரிபொலியும்.. கைத் தட்டலும்...அதிரச் செய்தது...அடுத்து என் கவிதை...இளைஞர்களாகிய நாம்..என்று ஆரம்பித்தேன்.அதில் இளைஞர்களின்  எதிர்பார்ப்பு...தேவை...தேடல்.. ஏக்கம்..கனவு... காதல்...ஆகியவைப் பற்றிச் சொன்னேன்...கவிதை படித்து முடித்ததும்..குடும்பத்தோடு இருந்த ஆபீசர்களின் பக்கத்தில் இருந்து..once more கேட்டு வந்தது..நான் .. அருள்தாஸ் சார் முகம் பார்த்தேன்...மீண்டும் படிங்க... என்றார்.மீண்டும் அந்தக் கவிதையைப் படித்தேன்...பலத்த கைத்தட்டல்...அந்தக் கவிதையில் அவர்கள் விரும்பிய பகுதி...காதல் .... பற்றியது...... வாடி விழும் சின்ன இடைக் கொண்ட மீனா.. உன் விழி இரண்டும் என்ன சேல் கெண்டை மீனா..சாலையிலே  நடை பயிலும் கள்ள விழி மீனா.. நீ சோலையிலே துள்ளி ஓடும் புள்ளியின மானா... அன்பினால் அழைப்பு விடும் ஆருயிரே மீனா...உன் அடர் கருங்கூந்தல் என்ன கார் முகில் தானா...பொதிகை மலை விட்டெழும் தென்றலே மீனா ..நீ பொற்கலசம்  தாங்கி வரும் சிற்றேர் தானா..தென்னகத்து உடமை அந்தத் தீந்த் தமிழே மீனா...உன் அகத்துக் கோவிலிலே எழும் தெய்வம் நானா............    பரிசு வழங்கும் போது... கி மேன்  கிட்டண்ணா....என்ற கன்னட நாடகத்துக்கு முதல் பரிசும்... என் கவிதைக்கும்...                   நாடகத்துக்கும் சேர்த்து இரண்டாம் பரிசும்..பாடல் பாடியவருக்கு மூன்றாம் பரிசும் DRM/SBC வழங்கினார். அருள் தாஸ் சார் என் கை குலுக்கி வாழ்த்தினார்.. சக நண்பர்கள் வாழ்த்தினார்கள்... லக்சரர்.. இன்ஸ்டக்டர்கள்....மற்றும் பலரும் எங்கள் டீம்மை வாழ்த்தினார்கள்....மனதில் மகிழ்ச்சி...உள்ளத்தில் உற்ச்சாகம்...தாங்க முடியாத சந்தோசம்... அளவிட முடியாத துள்ளல்.....மெட்ராஸ் டிவிஷனைத் சேர்ந்த நாங்கள் பெருமையோடு மகிழ்ந்து போனோம்...ஹாஸ்டல் திரும்பும் வழியில் ...உங்கள் கவிதை நன்றாக இருந்தது... நகைச்சுவை நாடகம் அருமை என்று...எதிர் வந்தவர்கள் வாழ்த்திச் சென்றார்கள்...ஹாஸ்டல் அறையில் நாங்கள் மகிழ்ந்து சிரித்து... தூங்க ஆரம்பிக்கும் போது... இரவு  இரண்டு மணியைத் தாண்டி விட்டது. ......எங்கோ கதவு தட்டும் சத்தம் கேட்டது...எழுந்து கதவைத் திறந்த ரவீந்திரன்...போஸ்ட் மேன் .. சொன்னதைக் கேட்டு ..என்னை எழுப்பினார்...என் அன்புத் தங்கை தனூசா...மேட்டூர் அணையில் இருந்து கொடுத்த தந்தி.. ..................நான் அன்று..1985 ஜூன் மாதம் வெள்ளிக் கிழமை 7 தேதி இரவு... எவ்வளவுக்கு ...மகிழ்ச்சி துள்ளளோடு ...சந்தோசம் அடைந்துக் கொண்டு இருந்தேனோ ..அந்த அளவுக்கு...மேட்டூர் அணை அரசு ஆஸ்பத்திரியில் ...என் பெங்களூர் பயிற்சித் நிலையத்தின் விலாசத்தைக் கொடுத்து  ...தந்தி கொடுக்கச் சொல்லி ...நெஞ்சு வலியுடன் அப்பா துடித்துக் கொண்டு இருந்திருக்கிறார் . அன்று இரவு முழுதும் அந்த யூத் டே நிகழ்ச்சியில் சந்தோசத்தில் மிதந்து  ஆனந்தக் கண்ணீர் விட்ட நான் ..அடுத்த நாளிலிருந்து அப்பாவை இழந்து சோகக் கண்ணீர் விட ஆரம்பித்தேன்.                06.06.2025












.

Comments

Popular posts from this blog

ஆத்மா

ராகம்

நாராயணி கண்ணகி.