கன்னத்தில் அறை

இப்பொழுதும் ...என் இடது கன்னத்தை தடவும் போது பளார்... என ஓர் அறை விழுவது போல ஓர் வலி... ஓர் உணர்வு தோன்றுகிறது.    அந்த வலியின் தாக்கம் நாற்பத்து ஏழு ஆண்டுகள் கடந்தும் இன்னும் நினைவில் பதிந்து உள்ளது.                                           என்னை அடித்தவர்...                         திரு. ஆர்ஶ்ரீ....அதாவது ஆர்.ஶ்ரீதரன்... MSc...maths...
என் முதல் செமஸ்டர் maths lecturer... எனக்கு மட்டுமா கன்னத்தில் அறை....வகுப்பில் உள்ள நாற்பது பேரில் முப்பது மாணவர்களுக்கு மேல்... கன்னத்தில் அறை...முதுகில் குத்து..இடுப்பில் கில்லு. ..அடிமட்டுமல்ல ...முகத்தை நோக்கி  தூக்கி எறிந்த நீண்ட வெள்ளைக் கணக்கு                               நோட்டு...காற்றை கிழித்துக் கொண்டு மேல் மாடியில் இருந்து கீழே பறந்து போய் கிழிந்து விழுந்தது. .                                            அந்த SIT யில் ...THS ..Technical high school..படித்து முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள்..மற்றும்..அங்கே படித்துக் கொண்டிருந்த சீனியர் மாணவர்களை விசாரித்து ..அவர்கள் படித்த புத்தகங்களை முன்னமே வாங்கி படிக்க ஆரம்பித்தவர்கள் தவிர.. மீதி உள்ள நாங்கள் அனைவரும் அறையும்...அடியும் வாங்கினோம்.                                              அந்த ஆர் ஶ்ரீ... ஐந்து அடி உயரம் தான் இருப்பார்..எங்கள் கன்னத்தில் எகிறி... எகிறி அறைகிறார்....அவர் அடித்தது வலிக்க வில்லை... ஆனால்...பதினோராம் வகுப்பு வரைப் படித்து ...படிப்பில் போட்டி. .பேச்சுப் போட்டி...விளையாட்டுப் போட்டி....ஓடுதல்...எறிதல்..தாண்டுதல்.. பூப் ...பந்து... கூடைப் பந்து ..என பள்ளியில் ஒரு வெற்றித் திலகமாக ..மாணவர்கள்..மாணவியர்கள்..... ..ஆசிரியர்கள் என அனைவரின் உள்ளங்களையும் கொள்ளைக் கொண்ட ...அவர்கள்....விரும்பும் ...ஒரு நட்சத்திரமாக...              பிரகாசித்தவரை...கல்லூரியில் ஒருவர் கன்னத்தில் எகிறி ...எகிறி அடிக்கிறார்...என்றால்...அவமானம்....     வெளியேத் தெரிந்தால் அசிங்கம்... அசிங்கம்..                                      என்னைக்  கல்லூரி விடுதியில் விட ...அப்பாவும் திருச்சி வந்து இருந்தார்.அப்பொழுது எல்லாம்.. துணிமணிகளை வைக்க பாதுகாப்பானது ..VIP ஷூட் கேஸ் தான்..ஆனால் விலை அதிகம்.. அதிக விலைப் போட்டு வாங்க முடியாத பணக் கஷ்டத்தில்....சூழலில்...அப்பா ஒரு சாதாரண ஸ்டார் அடையாளம் கொண்ட சூட் கேசை நாற்பது ரூபாய் விலையில் வாங்கிக் கொடுத்தார்..இருந்த பழைய உடைகளோடு..இன்னும் இரண்டு செட் டிரஸ் வாங்கிக் கொடுத்தார்.....சாப்பிட ஒரு எனாமல் பூசிய தட்டும்...ஒரு போர்வை.. பவானி பெட் ஷீட்....தலையணை...கோரைப் பாய்..நாலு அடி நீள கதர் துண்டு...பிளாஸ்டிக் பக்கட்....மக்கு...பிஸ்கட்..சீடை..அதிரசம்... மிக்ஸர்....இவைகளோடு அம்மா....சவுக்கு... யூக்கலிப்டஸ் மர விறகில் ஊது குழல் கொண்டு அடுப்பை மூச்சுப் பிடித்து ஊதி... ஊதி புகையில் கண் சிவந்து கலங்கி .. முந்தானை நுனியில்  மூக்குத் துடைத்து.. சிரமப்பட்டு .... செய்து கொடுத்து இருந்த முறுக்கு...பணம் நூற்றி ஐம்பது ரூபாய்...என் கையில் கொடுத்து விட்டு...அப்பா..என்னை மேலும் கீழுமாக ..ஆழமாக ..ஒரு முறை பார்த்து விட்டு ..உஷாராக படி..என்று சொல்லி விட்டு ...விடைப் பெற்றார்.   ..                              அப்பாவின் அந்தப் பார்வையின் அர்த்தம் அப்போது எனக்குப் புரியவில்லை. ஆனால் அப்பாவின் அந்தப் பார்வை... என்ன என்பதை..நான் ஒரு அப்பா ஆனபோதுதான் அர்த்தம் புரிந்துக் கொண்டேன்.                                     மகனே ...என்னால் முடிந்தது இவ்வளவுதான்...இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது....இனி உன் திறமை..படித்து ... வேலை வாங்கி நம் குடும்பத்தை காப்பது... உன் கையில்.தான்... திருமணத்திற்க்காக.... உன் சகோதரிகள் மூன்று பேர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்  என்பதுதான்....      உண்மைதான்...நான் இரயில்வேயில்.பணிக்குச் சேர்ந்து ஆறுமாதத்தில். அப்பா. திடீர் என எங்களை தவிக்க விட்டு சிவனடி சேர்ந்து விட்டார்..அதன் பிறகு என் இரண்டு இளைய சகோதரிகளுக்கு...நான் தான் வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தேன்.                                        நான்கு முழ கதர் வேட்டி...அரைக் கை சட்டை..லாரி டயரில் தைத்த செருப்பு..வலது கையில் எப்பொழுதும் கட்டி இருக்கும் ..மேல்மருவத்தூர் ஶ்ரீ ஆதிபராசக்தியின் சிகப்புக் கயிறு...படிப்பதற்கு பாக்கட்டில் வைத்து இருக்கும்  மூக்குக் கண்ணாடி...பாதி நரைத்த மீசை ... நுனி வெளுத்த.  முன் தலைமுடி.... இது தான்... இருபத்து ஓர் ஆண்டு இந்திய இராணுவத்தில் பணியாற்றிய...ஹவில்தார் ஆறுமுக முத்துசாமியின்....என் அப்பாவின்...அடையாளங்கள்...               அப்பா ....கண்ணில் இருந்து மறையும் வரை...அவரைப் பார்த்துக் கொண்டே நிற்கிறேன்..    அப்பா...இந்த நேரம் வரை என்னோடு இருந்தது...ஒரு நிறைவாக....கனமாக... பூரிப்பாக...பெருமையாக...பலர் என்னை சூழ்ந்து பிடித்து நிற்பது போல இருந்தது...அப்பா... சென்றப் பிறகு....நான் திடீர் என ஒரு பள்ளத்தில் விழுந்தது போல உணர்கிறேன் ...அப்பா என்றால் ஓர் பலம்.... ஓர் தைரியம்.. அப்பாக்கள் இப்படி ..நம்மை பெற்று... போற்றி.. போற்றி.. வளர்த்தனால் தான்..அவர்கள் போன பிறகும்...நம்மால்...அவர்களை....   மறக்க முடியாத நினைவுகளோடு தவித்துப் போகிறோம் .... தெய்வங்களாக...ஒவ்வொரு நிகழ்விலும் ...நம்  தாயும் தந்தையும்.....   நம்மோடு வளம் வந்து கொண்டிருக்கிறார்கள்.                                               அந்த ஹாஸ்டலில் ..இடது புறம் இருந்த முதல் அறையில்...மேட்டூர் கெமிக்கல்ஸ் கம்பனியின் ஸ்பான்சரில் படிக்க வந்த..கிரிதரன்..வெங்கடேசன்...ஶ்ரீதரன்..ரவிகுமார்...நான் ஆகிய நாங்கள்  தங்கிக் கொண்டோம்.                                 ஹாஸ்டலில் மூன்று வேளையும் வித விதமான வாசனை நிறைந்த உணவு வகைகள் சமைத்து வழங்கப் பட்டன...கல்லூரி வகுப்பு முடிந்து வந்ததும் மூன்று வேளையும் வயிறு முட்ட சாப்பிட்டதால்...விடுதியிலும் ..வகுப்பு அறையிலும் ...                      தூக்கத்திற்கு குறைவில்லை..நல்ல தூக்கம்...வயிறு நிறைய சாப்பாடு...இதற்குள் ஒரு மாதம் ஓடிவிட்டது... மேத்ஸ்... பிசிக்ஸ். கெமிஸ்ட்ரி..டெக்னிக்கல் டிராயிங்...ஒர்க்ஸ் ஷாப்...இது தான் முதல் செமஸ்டரின் பாடங்கள்....வகுப்பில் பாடங்கள் ஆங்கிலத்தில் எடுக்கப் பட்டன..தமிழ் மீடியத்தில் பள்ளிப் படிப்பை படித்ததால்...ஆங்கிலத்தில் பாடம் எடுக்கும் போது... எண்பது பர்சென்ட் ஒன்றும் புரிய வில்லை...வகுப்பில் உட்கார்ந்து இருப்போமே தவிர...எண்ணம் எல்லாம்....வீட்டில் விளையாடுவது போல இருக்கும். வகுப்பு அதன் போக்கில் போய்க் கொண்டு இருந்தது ..யாரும்                      கேட்பாரில்லை...நன்றாக  சாப்பிடுவது... தூங்குவது...வகுப்புக்குச் செல்வது வருவது.. கொடுக்கும் நோட்ஸ்யை நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொள்வது என்று நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தன...வாரம் ஒரு முறை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வாழ்நாளில் முதன் முதலில் கடிதம் எழுத ஆரம்பம் ஆனது.              பதினேழு வயது வரை அப்பாவின் உடல் நலம்.அம்மாவின் உடல் நலம்...உடன் பிறந்த சகோதரிகளின் உடல் நலம்...இவைகளைப் பற்றிய எண்ணம் வந்ததே கிடையாது...ஆனால் இப்போது .. அவர்களைப் பிரிந்து நூற்றி இருபது கிலோ மீட்டர் தொலைவில் வந்து இருக்கும் நிலையில்....அப்பாவின்....உழைப்பு....அதில் வரும் சிறிய வருமானத்தில்...பெற்ற குழந்தைகளின் வளர்ச்சிக்காக....வாழ்க்கைக்காக... பாடுபடுவது...நன்றாக உணர முடிகிறது...அம்மா....பத்து மாதம்...சுமந்து...பெற்று எடுத்து..பாலூட்டி.... சோறு ஊட்டி வளர்த்து...உடல் நலுங்கிய காலங்களில் விரதம் இருந்து... பட்டினி கிடந்து வளர்த்து.... இந்த உலகில்  ஈடு இணையற்ற ஓர் தியாக உள்ளம் கொண்ட தீப சுடராக கண்களில் தெரிகிறார் ...உடன் பிறந்த சகோதரிகள்....கிண்டல்... கேலி...என சிரித்து விளையாடிக் கொண்டிருப்பதுமாக..நினைவுக்கு வருகிறார்கள்... ஏன்  சிரிக்கிறோம் என்றே தெரியாமல் சிரிக்கும்  பள்ளி பருவத்து நண்பர்கள்.....இவர்களை எல்லாம் விட்டு விட்டு...இப்போது...ஒரு புதிய வெளி இடத்தில் ....புது புது முகங்களோடு...புரியாத ஒரு மொழியோடு...வந்து மாட்டிக் கொண்டு தவிப்பது...நன்றாகவே தெரிகிறது...சூட் கேசை தூக்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு போய் விடலாமா என்றுக் கூட தோன்றியது...பாடம் புரிய வில்லை..ஆங்கில மொழி விளங்க வில்லை...பாடப் புத்தகத்தை எடுத்துப் படித்தால்...இதற்கு முன்னரே படித்த வகுப்பில் இதை படித்து இருப்பீர்கள் என்று எழுதி இருக்கும்...இதற்கு முன்னரே என்றால்...பள்ளி இறுதி வகுப்பிலா... அண்டக சுரபிகள்... பித்தாகரஸ் தேற்றம்.  இந்த இரண்டும் தான் பள்ளியில் அவுட் ஆஃப் சிலபஸ் என்று..நடத்தப் படாதவை...ஆனால்... திரிக்னாமென்றி.. அனலிடிக்கல் ஜாமன்றி ....இவைகள் முன் வகுப்பில்  படிக்க வில்லையே...
ஏன்டா ....இங்கே படிக்க வந்தோம் என்று மனம் சலித்துப் போனது...                        லெக்சரர் ஆர் ஶ்ரீ...கன்னத்தில்  அறைந்த  போது சொன்ன வார்த்தை...காதில் ஈயத்தைக் காச்சி சொய் என்று ஊத்தியதுபோல இருந்தது...இவ்வளவு பணம் செலவு பண்ணி உங்களை இங்கே .. உங்க அம்மா அப்பா... அனுப்பனது....சும்மா..சாப்பிட்டு உட்காந்துட்டு .. தூங்கிட்டுப் போகவா...நீங்க படிச்சு வேலைக்குப் போகத்தான்...சம்பாதிச்சு நீங்க நல்லா வாழணுங்கறத்துக்காகத்தா ன்..ஒரு மாதமா வகுப்பு நடத்தியும்...ஒரு                                   டெரிவேசனைக் கூட  . டிரைவ் பண்ணத் தெரியல.....உங்களை சும்மா விட மாட்டேன்..ஒரு வாரம் டயம் தரேன்...அதற்குள் நீங்கள்...பிக் அப் ஆகவேண்டும்..இல்லை.. டி சி கொடுத்து காலேஜ்யை  விட்டு தொ றத்திடுவேன் என்று மிரட்டினார்...      இரவு உணவிற்குப் பிறகு..விடுதியை விட்டு வெளியே வந்து...அப்படியே வீட்டிற்க்கு பஸ் ஏறி விடலாம் என்று...தடுமாறிய போது..இரவுக்கு இன்ஸ்பெக்க்ஷன் வரும் ஹாஸ்டல் வார்டன்..மேஜர்.G.தியாகராஜன்... மீசையை தடவி கொண்டு வருகிறார்..வந்தவர்...ஸ்டடி hours ல வெளியே எங்கே போரே..என்று        அதட்டினார்..முன்னமே  கழண்டு போய் இருக்கிற நான்... அழ ஆரம்பித்தேன்..என் அருகில் வந்ததும்...தம்பி... வீட்டை விட்டு பிரிந்து வந்தால் ...இப்படித்தான் இருக்கும்...போகப் போக சரியாகிடும் என்று எனக்கு ஆறுதல் சொன்னார்...சரி உள்ளே போ என்றார்...நான் அமைதியாக நின்றேன்...வேறென்ன  ஏதாவது ராக்கிங்....இல்லை சார்...maths புரிய வில்லை என்றேன்..தமிழ் மீடியத்தில் படித்தாயா..என்றார்..ஆமாம் .என்றேன். மீண்டும்.. போகப் போக சரியாகிடும் .என்று என் தோள் மீது தட்டினார்..சார்... பேசிக் தெரியாமல்...maths புரிய வில்லை என்றேன்...அப்படியா....உங்க ஸ்கூலில் அது எல்லாம் நடத்தி இருக்க மாட்டார்கள்...நீ ஒன்னு செய்...நாளைக்கு வகுப்பு முடிந்ததும்...மெயின் கார்டு கேட் சென்று...அங்கே பழைய புத்தகங்கள் கடைகள் இருக்கும்...பழைய puc புத்தகங்களை வாங்கி படி...உனக்கு பேசிக் புரியும் என்று வழிகாட்டினார்..வார்டன் சார் சென்ற பிறகு...நாங்கள் பேசியதை ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ..என் அறைக்கு வந்து என்ன பேசினீர்கள் என்று ஆவலோடு வினவினர்..நான் விவரத்தைச் சொன்னேன்..நாங்கள்...முன்னமே.. பிசிக்ஸ்.. கெமிஸ்ட்ரி... மேத்ஸ்.... ஓல்ட் puc புத்தகங்களை வாங்கி படித்து வருகிறோம்...என்று சொன்னார்கள்... எனக்கு... பக் என்று ஆனது...நாம்  எவ்வளவு விவரம் தெரியாமல்..வெகுளியாக இருக்கிறோம்..இவர்கள் எவ்வளவு விவரத்துடன் ..வெளியேச் சொல்லாமல் இருக்கிறார்கள்...என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது..அடுத்தநாள் மாலை...நானும் ரவிக்குமாரும் மெயின் கார்டு கேட் தெப்பக்குளம் அருகில் சென்று... அந்தப் புத்தகங்களை வாங்கிக் கொண்டோம்...பிறகு....முதல் முதலாக மலைக் கோட்டை பிள்ளையாரை தரிசித்து விட்டு... மனபாரத்தை இறக்கி வைத்து விட்டு... செல்லலாம் என்று...நானும் ரவிக்குமாரும்....அந்த பிரிசித்தி பெற்ற மலைக் கோட்டை பிள்ளையாரை நோக்கி...படி    ஏற ஆரம்பித்தோம்....உயரமான அந்த படிக்கட்டுகளில் ஏறுவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது..    உள் நுழைந்து வளைந்து மேலேறி வெளி வந்தால்.... அட...அடா ... வா என்று வாரி அனைக்கும் சில் என்றக் காற்று... ஆளைப் பிடித்து தள்ளுவது போல அனைத்துச் செல்கிறது...   அங்கே      உயர்ந்த அகன்ற பாறையின் மீதே படி அமைத்து இருக்கிறார்கள்..படி ஏறும் போது கை பிடித்து ஏற இரண்டு புறமும் கயிறு கட்டி இருக்கிறார்கள். உச்சி நெருங்க நெருங்க...காற்றின் வேகம் ஹோ... வென அதிகரிக்கிறது.ஆடைகளை அவ்வப்போது கைகளால் அழுத்திப் பிடித்துக் கொண்டு அவரவர்...பக்தி நிறைந்த மனத்துடன்  படி ஏறி க்கொண்டு இருக்கிறார்கள்.          முதல் கடவுள் யானை முகத்தானை.. முன் நின்று .. முகம் பார்த்து ..மனம் உருகி வணங்கி....பழைய புத்தகங்களை வாங்கி விட்டேன்...படித்தால் புரிய வேண்டும்...நிறைய மார்க் எடுக்க வேண்டும்... பாஸ் செய்ய வேண்டும்..படித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும்.அப்பா அம்மா வின் கஷ்டங்களை தீர்க்க வேண்டும். என்று வேண்டிக் கொண்டேன்.  இம்..இந்தாங்கோ...என்று..குருக்கள் கொடுத்த விபூதியை வாங்கி நெற்றியில் அணிந்து..நெஞ்சில் வலது கையை வைத்து...இனம் புரியாத ஓர் அமைதியான நிறைவைக் கொண்டேன்.பிறகு சற்று கீழே இறங்கி படிகட்டின் ஓரம் .. பாறையில்  இடம் பிடித்து .மற்றவர்கள் போலவே நானும் ரவியும் அமர்ந்துக் கொண்டோம்..அடிக்கும்                        காற்றும்...அமைதி கொண்ட உள்ளமும் ....ஆண்டவனின் முக தரிசனமும் .... அங்கே கிடைத்ததால்...இது நாள்வரை இருந்த மனபாரம் விலகி ஒரு தெளிவு கிடைத்தது..மகிழ்வோடு... மன நிறைவோடு...மேலே அன்னார்ந்துப் பார்த்தால்...லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் என்னைப் பார்த்து கண்ணடித்து சிரிகின்றன....மஞ்சள் நிற நிலவு மேகத்தில் முகம் துடைத்து மெல்ல மேலே எட்டிப் பார்க்கிறது... குளிர்க்  காற்றும்...எழும் நிலவும்...தவழும் முகிலும்... கண் சிமிட்டி ..கை நீட்டி அழைக்கும் நட்சத்திரங்களும்...அந்த திருச்சி மாநகரின் மின் விளக்குகளோடு...கலந்து அழகு சேர்க்கின்றன....ஶ்ரீரங்கத்து கோபுரங்களும்... செயின்ட் ஜோசப் கல்லூரியின் உயர்ந்த முகப்பு           வாயிலும்...காவிரியில் ஓடும் நீரின் வளைவும் .  பாலமும்..இருளில்... தெரிகின்றன .இந்த மலைக் கோட்டையில் உள்ள . உச்சி பிள்ளையார் கோயில்.. திருச்சி மாநகரின் ..ஒரு வரப் பிரசாதம்....       மலைஉச்சி விட்டு...கீழே தெப்பக்குளம் கடந்து மெயின் ரோடு வந்த போது....பசிக்கிறது ஏதாவது சாப்பிடலாம் என்று...ரவிகுமார் சொன்னார்...பஸ் பிடித்து ஹாஸ்டல் சென்று விடலாம் என்றேன்..அதற்கு..ரவி... பரவாயில்லை...நான் பணம் செலவு செய்கிறேன்.வா..என்று...தெப்பக் குளத்தின் நேர் எதிர் இருந்த மாடி தோட்ட ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்...சிகப்பு  நிறத்தில் ஹோட்டல் செம்மீன்... என்று எழுதி இருந்தது...மெல்லிய மேள இசை காற்றில் கலந்து வந்தது...இரண்டு சப்பாத்தி...நாட்டுக் கோழி வறுவல்...ரவிகுமார் ஆர்டர் செய்தார்.இந்த ஹோட்டலுக்கு இரண்டு முறை ரவி வந்து இருப்பதாகச் சொன்னார்...நான் விரும்பி சாப்பிட்டேன்.. சுவை நன்றாக இருந்தது...என்னை கவனித்த ரவிகுமார்...இது என்ன சிக்கன் எலும்புகளை அப்படியே போட்டு விட்டாய்...நாட்டுக் கோழி ... சிக்கனில் எலும்பு தான் இருக்கும்... குழம்புக்குதான் சாப்பிடுவது...இப்படி சாப்பிடக் கூடாது..எலும்புகளை மென்று சூப்பு உறிஞ்சி துப்ப வேண்டும்..என்றுச்  சிரித்தார்... இப் பொழுதும் சிக்கன் சாப்பிடும் போதெல்லாம் ..அந்த ஹோட்டல் செம்மீனும்...ரூம் மேட் நண்பன் கொளத்தூர் ரவிக்குமாரும் நினைவுக்கு வரத் தவறுவதில்லை...   ரவிக்குமாரின் அப்பாவும் என் அப்பாவும் மேட்டூர் கெமிக்கல்ஸ் யில் ஒரே செக்சனில் பணியாற்றுபவர்கள்..இருவரும் மிலிட்டரி சர்வீஸ்...நண்பர்கள்...கொளத்தூரில் விவசாய நிலபுலன்கள் கொண்ட ரவிக்குமாரின் அப்பா...நிலத்தில் விளையும்..பச்சையான...வேர்கடலை...மொச்சை..அவரை.. கொய்யா..பெண்களின் விரல்களைப்  போன்ற நீண்ட.. நீண்ட..மிளகாய்... கோடுகள் கிழித்ததுப் போன்ற ஊதா நிற கொளத்தூர் கத்தரிக்காய்...தக்காளி...இன்னும் பிற காய்கறிகளை கொண்டு வந்து பொங்கல் பண்டிகையின் போதும்.....அறுவடை செய்யும் போதும் அப்பாவிடம் கொடுத்து...செஞ்சு சாப்பிடுங்க என்பார்...அந்த தாராள குணம்.. அடுத்தவருக்கும் கொடுத்து உதவும் குணம் ...ரவிக்குமாரின் அப்பா அங்கப்பக்கவுண்டர் போலவே நண்பர் ரவிக்குமாருக்கும் இருந்தது பாராட்டுக்கு உரியது.                           ஒரு முறை ரவிக்குமாரின் அப்பா அங்கப்பக்கவுண்டர் ...எங்கள் வீட்டிற்க்கு வந்து தன் மகளின் பூப்பு புனித நீராட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுத்துச் சென்றார்.அப்பாவும் பிற நண்பர்களும் கொளத்தூர் சென்று..ஒரு பை நிறைய காய்கறிகளைக் கொண்டுவந்தார்கள்.      ரவிக்குமாரின் பெரியப்பா முத்துக் கவுண்டர் இவரும் ஒரு மிலிடரி சர்வீஸ்.. அதே கெமிக்கல்ஸ் கம்பனியில் அப்பாவோடு பணியாற்றினார்.அவர் அரசு ...சட்டம்.... விதி முறைகளில் நல்ல ஞானம் உள்ளவர்... ஏதாவது சந்தேகம் என்றால் முத்துக்கவுண்ட ரைத் தான் அணுகுவார்கள் .வந்தவருக்கு தகுந்த உதவி தவறாமல் செய்வார்.ஆக ரவிக்குமாரின் குடும்பம் பிறர்க்கு உதவும் குணம் கொண்டதாக இருந்தது.இப்படி அடுத்தவருக்கு கொடுத்து உதவும் குணமும்..பழகும் விதத்தில் பணிவும்..மற்றவரை மதிக்கும் பண்பும் அந்தக் குடும்பத்தில் நிறைந்து காணப்பட்டதால்...என் பெரிய அக்கா தனபாக்கியம்தங்கராஜ் ..தனது மூன்றாவது பெண் குழந்தைக்கு ...தம்பி ஒரு நல்ல பெயரை இந்த குழந்தைக்கு வைப்பா...என்று கேட்ட போது...எனக்கு  உடனே நியா பகத்துக்கு வந்தது...ரவிக்குமாரின் தங்கை பூப் புனித நீராட்டு விழாவிற்கு வந்து இருந்த...அழைப்பிதழில்... வளர்மதி  என்ற பெயரை அக்காவின் குழந்தைக்கு பெயர் சூட்டினேன்.


அந்த செமஸ்டரில்.  நூத்துக்கு எண்பத்து எட்டு மார்க் மேத்ஸ்யில் எடுத்தேன்...                                    கல்லூரி படிப்பை முடித்து மூன்று வருடங்கள் ஆகியும் கூட அந்த         ஆர்ஶ்ரீ...அடித்த கன்னத்தின் வலியும்...அவர் எப்படி ஒரு கல்லூரி மாணவனை கை நீட்டி அடிக்கலாம்...என்ற கோபமும்..வன்மமும்....தணியாமல் தான் இருந்தது...                                   இப்போது ஆர்ஶ்ரீ....அவர்களின் பாதம் பணிந்து ..பசும் பாலால் பாத பூஜை செய்ய வேண்டும் போல் இருக்கிறது...நம் படிப்புக்காக...நம் வாழ்க்கைக்காக... வழிகாட்டத்தான் ...ஒரு மாதம் ஆகியும் இன்னும் படிக்காமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கம் தான். . அவரின் சிறிய மெதுவானக் கை என் கன்னத்தை அடித்து இருக்கிறது ..          ஆசிரியரின் பணி பாடம் சொல்லித் தருவது மட்டுமல்ல ...மாணவர்கள் படிப்பிலும் முன்னேற்றம் உள்ளதா என்பதை  கவனிப்பதிலும் உள்ளது... என்பதே ...அந்த ஆசிரியப்                        பெருந்தகை ஆர்ஶ்ரீ யின் பேராவல்... ஒரே அடியில் என்னை இந்த அளவிற்கு கொண்டுவந்தவர் அந்த ஆசான் ஆர் .ஶ்ரீதரன்..Msc maths lecturer...அவர் கன்னத்தில் அடித்தது... அம்மா கன்னத்தில் முத்தம் இடுவதுபோல இன்று இதமாய் இருக்கிறது....அவரை.... அந்த ஆசிரியரை... பெற்றவருக்கு.. அடுத்து ..மாதா...பிதா...குரு... என்ற நிலையில் மதிப்பிட முடிகிறது....   29.03.2025                                                       " சேலம் வசந்த்"

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆத்மா

ராகம்

நாராயணி கண்ணகி.