படிப்பும் பயணமும்

மேட்டூர் அணை... VHS பள்ளியில் பதினோராம் வகுப்பு வரைப் படித்தப் போது .. பாதிநேரம் படிப்பு ...மீதிநேரம் விளையாட்டு என்று  காலந்தள்ளியப் பிறகு .. மேற்க்கொண்டு படிக்க...மிதக்கும் எண்ணங்களோடு... மே மாத இறுதியில்......1978 யில் திருச்சி அரியமங்கலம்.  . Sashasayee institute of Technology/.SIT யின் மெயின் gate முன்பாக இரவு ஏழு மணிக்கு நானும் அப்பாவும் திருவெறும்பூர் செல்லும் பஸ்சில் இருந்து இறங்கினோம்.                   அந்த கேட் முன்பாக... நல்ல உயரத்தில் ...சிவப்பு நிறத்தில்...இடுப்பில் பஞ்சகச்சம் ..உடம்பில் கோட் ..சூட்...   காலில் ஷு ..தலையில் முண்டாசு.... முன் நெற்றியில்... புருவத்தில் இருந்து நெற்றி வரை நீண்ட நாமம்..கொண்ட ஒருவர் நின்று இருந்தார்.அவரின் வலதும் இடமுமாக இருவர் நின்று கொண்டு இருந்தார்கள்....        அவரைப் பார்த்துத் தயங்கிய... என் தந்தையாரைப் பார்த்த அவர் .. எங்கே இருந்து வறிங்க... என்றுக் கேட்டார். அப்பா...மேட்டூர் அணை கெமிக்கல்ஸ் யில் இருந்து..என்றுச் சொன்னப் போது...                                          சந்தானம் அனுப்பினாரா...என்றார். ....ஆமாங்க ஐயா என்றார் அப்பா.... பகல்ல வரது தானே ...என்றார்.... காலைல பதினொரு மணிக்குத் தான் ...ஆபிஸ்ல கூப்பிட்டு லெட்டர் தந்தாங்க....நாளைக்கு அமாவாசை ..அதுனால இன்னைக்கே இங்கே  வந்துட்டா.... என்று அப்பா முடிக்கும் முன்பே.....              ஆமாம்மா...நாளைக்கு அட்மிஷன்... போட்டு விடலாம் என்றவர் ..இரவு எங்கேத் தங்கப் போறிங்க என்றார்.                          அதற்கு அப்பா...அதான் தெரியல என்று இழுத்தார்...                                             தன் இடதுப் பக்கம் நின்றவரின் முகம் பார்த்து.....பாலு...இவங்களை ஹாஸ்டலில் தங்கவை...என்று உத்தரவிட்டவர் ... ம்..சரி.. காலைல பார்க்கலாம் என்று எதிரே குறுக்கே இருந்த தார்ச்சாலையை இரண்டு புறமும் பார்த்து கடக்க ஆரம்பித்தார்...அப்பா இரு கை கூப்பி வணங்கினார்...                                       நம்ம ஊர் பகுதிகளில்..பேருந்துகள் பெரும்பாலும் சிகப்பு மஞ்சள்.. ஊதா நிறத்தில் காணப்படும்.ஆனால் திருச்சிப் பகுதிகளில்.. ஸ்டெயின் லஸ் ஸ்டீல் ஷீட்களால் பாடி பில்ட் செய்யப்பட்டு பஸ்சிற்கு முன்னால் நிற்பவர்கள் முகம் பார்த்து தலை சீவி பவுடர் போட்டு அலங்காரம் செய்யும் அளவிற்கு.... பல் தெரிய சிரித்து  அழகு பார்க்கும்  கண்ணாடிப் போல பள பள வென இருக்கும்.    அதில் படிந்து இருக்கும் புழுதி படிவில் ஆள்காட்டி விரல் நுனி வைத்து தங்களின் பெயர்களையும்...தங்களுக்கு விருப்பமானவர்கள் ...மறக்க முடியாதவர்களின் பெயர்கள்....பெயரின் ஆரம்ப எழுத்துக்கள்...உருவ சித்திரம் இவைகளை பஸ் நிற்கும் ஒரு சில  நிமிடங்களில் வரைந்து விடுவார்கள்...பஸ் நகர்ந்து கண்ணில் இருந்து மறையும் வரை....தங்களின் இதயத்தையே அந்த பஸ் இழுத்துச் செல்வதுப் போல பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.மேலும் பஸ்சின் நகர்வுக்கு ஏற்ப....அதன் அருகில் இருப்பவர்களின் உருவங்கள்... அவர்களின் பின்னால் இருக்கும் மரம் ....செடி...      கொடி..வீடு...கடை.. மலை...ஆகியவற்றின் உருவங்கள் வளைந்தும் நெளிந்தும் சாய்ந்தும்    கோணல் மானலாக     பல வடிவங்களைப் பெற்று...ஓடி விழுந்து மறையும். மேலும் பஸ்சில் இருந்து அவசரமாக.  இறங்குபவர்களும் ஏறுபவர்களும்     தங்களின் முகத்தையும் ஆடைகளையும்   சரிப்   பார்த்துக் கொள்ள தவற மாட்டார்கள்.    அப்படி பார்க்கும் பொழுது உள்ள அளவை விட அவர்களின் உடம்பின் அளவு அதிகமாகத் தான் தெரியும் ...     துவாக்குடியில் இருந்து வந்த பஸ் இரண்டு மூன்று நிமிடங்கள் நின்று நிதானமாக அவரை ஏற்றிக் கொண்டப் பின் மெதுவாகப் புறப்பட்டுச் சென்றது.                         அவரைப் பஸ்சில் ஏற்றியப் பின் பாலு மட்டும் திரும்பி வந்தார்...                   பாலுவுக்கு ஒரு நாற்பது வயதுக்குள் இருக்கும். சோடாப் புட்டி கண்ணாடி அணிந்து இருந்தார்.வெள்ளை வேட்டி.. அரைக் கைச் சட்டை ...நெற்றியில் திருநீறு நீளமாக ...இடது கையில் ஒரு டைரி வைத்து இருந்தார்.                           வாங்க...என்று எங்களை ... வலப் புறமாக இருந்த பெரிய விளையாட்டுத் திடலைக் கடந்து அழைத்துச் சென்றார்.                       சதுர வடிவில் இருந்த மஞ்சள் நிற இரண்டு அடுக்கு மாடி கட்டிட ஹாஸ்டலின்  நுழைவு வாயில் கதவைத் திறந்து உள்ளே அழைத்தார். வராண்டா லைட்டைப் போட்டப் பிறகுதான் இருள் ஓடி வெளிச்சம் வந்தது.இடது புறம் இருந்த முதல் ரூம் கதவைத் திறந்து ..இதில் தங்கிக் கொள்ளுங்கள் என்று  சொல்லிவிட்டு மேல் மாடிக்குச் சென்று விட்டார்.                   ஹாஸ்டலில்       மாணவர்கள் யாருமில்லை.. ஒரு சில சமையல் செய்பவர்கள் கண்ணில் பட்டார்கள்.                                             அந்த ரூம் காலியாக இருந்தது.அறையின் மூன்று மூலைகளிலும் மூன்று அடி உயரத்திற்கு ..இரண்டடி வளைவில் எழுதும் சிமெண்ட் கான்கிரீட் டேபிள் இருந்தது .எதிரே சுவரில் தலைக்கு மேலே ...நீண்ட ஒரு அடி அகல லாப்ட்  இருந்தது . கொண்டுச் சென்ற ரெக்சின்  பையை அப்பா அந்த மூலை டேபிள் மீது வைத்தார்...தூசி குப்பென மேலேப் பறந்தது...கதவைப் பூட்டி விட்டு... சாப்பிடக் கிளம்பினோம்...வெளியே  நுழைவு படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பீடிப் புகையை வெளியே  விட்டுக் கொண்டிருந்த இரவு  வாட்ச்மேன்  ஹோட்டல் இருக்கும் இடத்துக்கு வழிச் சொன்னார்.      வெளியே வந்து இடமாகத் திரும்பினால் தஞ்சாவூர் செல்லும் பிரதான சாலை....சற்றுத் தொலைவில் இருந்த ஒரு சினிமாத் தியேட்டரின் முன்பாக சிறிதும் பெரியதுமாக வரிசையாக டீ கடைகளும் ஹோட்டல்களும்  மின்விளக்குகளின் ஒளியில்.. டேப் ரெக்கார்டர்களில்  இளையராஜாவின் இசையை அலரவிட்டு வரவேற்றன.ஒவ்வொரு கடையிலும் ஓரளவு கூட்டம் காணப்பட்டது...ஆனால் ராஜா டீ ஸ்டால் என்று  போர்டு போடப்பட்டு இருந்த சிறிய ஹோட்டலில் கூட்டம் கொஞ்சம் அதிகமாக  இருந்தது.    ......இது மாதிரி உள்ள இடங்களில் சுத்தம் சுகாதாரம் பார்க்கவா  முடியும்.... .ஒவ்வொரு கடையின் முன் போடப்பட்டு இருந்த நாலுஅடி நீளப் பெஞ்சில் ஒரு சிலர் உட்கார்ந்துக் கொண்டு பீடி புகைத்துக் கொண்டு இருந்தார்கள்.அவர்களின் கால்களை உரசிக் கொண்டு இரண்டு மூன்று நாய்கள் படுத்துக் கொண்டு இருந்தன. சாப்பிட்ட இலை விழும் சத்தம் கேட்டதும் எழுந்து ஓடின.                            கடையின் உள்ளே இடம் காலியானதும் அப்பாவும் நானும் உள்ளேச் சென்று பெஞ்சில் அமர்ந்தோம்...                                    ஆவிப் பறக்க சூடாக நாலு இட்லி.. ஒவ்வொரு இட்லியும் ரப்பர் டென்னிஸ் பந்தை பாதியாக வெட்டியதுப் போல.  பெரிதுப் பெரிதாக.. இருந்தன....ஒரு பிளைன் ரோஸ்ட்.. பெரிய தலை வாழை இலைப் போல...இருந்தது..முதலில் ...புளிக்காத சாம்பார் சட்டினியோடு ...பின்னர் குருமாவோடு....பசிக்கு சாப்பிட்டு முடித்தோம்.....நல்ல சுவை. ... காரம்...உப்பு கொஞ்சம் கூடுதலாக இருந்தது..இரண்டு இட்லி இருபத்து ஐந்து காசு..ஒரு தோசை ஐம்பது பைசா...வழியில் இருந்த தள்ளு வண்டியில் புள்ளி வாழை வாங்கிச் சாப்பிட்டு...இன்னும் இரண்டு ..வாட்ச்மேனுக்குத் தர பேப்பரில் கட்டிக் கொண்டு திரும்பினோம்.                                             அப்பா ...நுழைவு வாயிலின் கதவோரம் கிடந்த ஒரு துடப்பத்தை எடுத்து வந்து அந்த அறையைப் பெருக்கினார்...தூசி புகைப் போல மேலே   எழுந்து அறை முழுக்க ஆட்கொண்டது.வாட்சுமேன் கொண்டு வந்து கொடுத்த ஒரு கோரைப் பாயைப்போட்டுப் படுத்தால்... தூக்கம் வரவில்லை.அப்பா வெளி வராண்டாவில் வாட்சுமேனுடன் பேசிக்கொண்டு இருந்தார்.மின்விளக்கை  அனைத்து ஐந்து நிமிடங்கள் கூட இருக்காது...என் முழங்கை முழுக்க சுள்...  சுள் என ஊசிக் குத்துவதுப் போல ...எழுந்து மின் விளக்கைப் போட்டால்...அப்பாவும் வாட்சுமேனும்.... என்னப்பா என்று உள்ளே வந்தார்கள்....பாயில் இருந்து.  மூட்டைப் பூச்சிகள்.... சிகப்பு பொட்டுப் போல..... ஓடி பாய்க்குள் மறைந்தன.... அப்பா...பாயை எடுத்து விட்டு .. தன் மேல் போர்த்தி இருந்த சால்வையை போட்டு ...படுக்கச் சொன்னார்.
....படுத்தேன்...மீண்டும் கடிப்பதுப் போன்ற உணர்வு.               எங்கிருந்தோ வந்த அல்லா  கோவிலின் தொழுகை ஓசை காதில் நுழைந்தது .சிறிது நேரத்தில் காகங்கள் கரையும் ஓசையும்...நாய்களின் குரைப்பும்.. கழுதைகளின் கனைப்பும் என்னைக் கண்  விழிக்கச் செய்தன.அப்பா...விடிய விடிய தூங்க வில்லை என்பது அவர் முகத்தைப் பார்க்கும் போதே தெரிந்தது.                  SIT கல்லூரியின் அலுவலக அறையைத் தாண்டி இருந்த ...சீராக அமைக்கப்பட்டு இருந்த ....பிரின்சிபால் அறையில்...நேற்று இரவு சந்தித்த முண்டாசு சார் அமர்ந்து இருந்தார்.அவரின் முன் இருந்த டேபிளில்..சிறிய முக்கோண நீள தேக்கு மரக் கட்டை ..ஶ்ரீ அனந்த நரசிம்மாச்சாரியார்...BE.,FIE... Principal என்று எழுதி இருந்தது. எங்களை வாங்கோ என்று வரவேற்றவர்.... சாப்பிட்டிங்களா..என்று விசாரித்தார்.      மேட்டூர் அணை கெமிக்கல்ஸ் சந்தானம் சார் கொடுத்த கடித்தத்தை வாங்கிப் படித்தவர்...என்னைப் பார்த்து... ஸ்மார்ட் ஆக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்...அவர் முகத்தில் சாந்தம் நிறைந்து காணப்பட்டது...உங்களுக்கு ஆர்டர் வரும் ...வந்துச் சேர்ந்து கொள்ளுங்கள் என்று என் முகத்தையே பார்த்துக் கொண்டு பிளஸ் சிலுவைப்போல தலையாட்டினார்.... போயிட்டு வாங்கோ....     என்றார்...                  அலுவலகத்தில் வேண்டிய சர்டிபிகேட் களைக் கொடுத்து விட்டு வெளியே வந்தோம்.                    அப்பாடா... என்று பெரு மூச்சு விட்ட  அப்பா.. முருகா என்று வேண்டிக் கொண்டார்.பையனை ஒரு சரியான கல்லூரியில் சேர்த்து விட்டோம் என்ற நிறைவு அப்பாவுக்கு...              வெளியே வரிசையாக வளர்க்கப்பட்டு ..இலை உதிர்வுக்குப் பிறகு....வெளிர் பசுமையாக காணப்பட்ட வேப்ப மரத்தின் நிழல்களின் அடியில் நீண்டு கிடந்த சிமெண்ட் பெஞ்ச் மீது அப்பா அப்படியே சாய்ந்து படுத்துக் கொண்டார்.என்னையும் கொஞ்சநேரம் படுத்து ஓய்வு எடுக்கச் சொன்னார்.இரவு சரியாகத் தூங்காததால்...நானும் அருகில் இருந்த இன்னொரு பெஞ்சில் படுத்துக் கொண்டேன்...குறைந்தது இரண்டு மணி நேரத் தூக்கத்துக்குப் பிறகு... வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு அப்பா என்னை .. எழுப்பா...என்றார்.                       எழுந்து உட்கார்ந்தால்...எங்களைச் சுற்றிலும் நாய்கள் படுத்துக் கொண்டு அமைதியாக கண் சிமிட்டி பார்த்தன .    காம்பவுண்ட்      அருகில் வெளிச் சுவற்றின் வெளியே கழுதைகள்  மெய்ந்துக் கொண்டு இருந்தன ...                        அப்பா..திருச்சி டவுன் போய் ஹோட்டல் செல்வத்தில்(இப்பொழுது ஹோட்டல் சரஸ்வதி) சாப்பிடலாம் என்றார்.                                               அந்தப் பஸ்சில் மட்டும் இனிமேல் ஏறக்கூடாது என்று என்னை எச்சரிக்கைச் செய்தார்.ATC யில் போகலாம் என்றார்..நானும் தலை ஆட்டினேன்.                                 அப்போது ...என் வாழ்நாளில் பயணம் என்பது...அவசரம் என்றால் பஸ்..நிதானம் என்றால் இரயில் ...சேலம் டூ மேட்டூர்....மேட்டூர் டூ சேலம்...இந்த இடங்களுக்கு செல்வதும் வருவதும்தான்..        பள்ளிப்படிப்பு....விளையாட்டு..வீடு இதில் தான் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.                     அமாவாசை இருட்டு.. பவுர்ணமி நிலவின் வெளிச்சம் என்றைக்கு என்று கூடத் தெரியாமல் நாட்கள் ஓடின  ..நீண்ட நேரம்..நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை.                                     பஸ் ....இரயில் இவைகளின் பயணத்தில்....இரயில் பிரயாணம் மிக அலாதியானது.                        நீராவி என்ஜின் கூ...கூ ..என்று  விசில் அடித்துக் கொண்டு வெள்ளை நிற நீராவியை இரண்டுப் பக்கமும் சுழன்று சுழன்று கக்கிக்  கொண்டு ..கரிய நிறமும் ..வெள்ளையும் கலந்த அடர்ந்த புகையை முதுகில் இருந்து குகு..புகு என தள்ளிக் கொண்டு... டக்... புக் என்று முழங்கையை மடக்கி சுழற்றுவதுப் போல.. இஸ்ஸ்.. புஸ்ஸ் ..என்று புறப்படும் காட்சி....புது துள்ளலை உள்ளத்தில் உருவாக்கும்.    இரயில் பெட்டியில் ஜன்னல் ஓரத்தில் உட்காருவதுதான்      ரொம்பப் பிடிக்கும்.அப்படி உட்கார்ந்து கண்ணாடி ஷட்டரை   மேலேத் தூக்கி  லாட்ச் போட முயன்றால் அது சரியாக சீட்  ஆகாமல் வளைந்து வழுக்கி வரும்... கிழே விழுந்தால்...வைத்திருக்கும் கை மீதோ...விரல்கள் மீதோ விழுந்து வெட்டி..காயம் ஏற்படுத்தும்.. வீங்குவதோடு இரத்தம் வரவும் செய்யும்..சில சமயம் விரல்களை நசுக்கி துண்டாக்கியும் விடும்.இதனால் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணிப்பது ஒரு பயத்துடன் தான் தொடரும்.                              இரயில் என்ஜினின் ஓசை மிக அதிகமாக இருந்தாலும் செல்லும் வேகம் மெதுவாகத்தான் இருக்கும்.    இரயில் நகர .. நகர...வெளியே நம்மை நோக்கி வளைந்து ஓடிவரும் மரம்.. செடிக் கொடிகள்...குடிசை வீடுகள்.. கட்சி கொடிக் கம்பங்கள்... அய்யனார் ...முனியப்பன் கோயில்கள்.கோபுரங்கள்..மலைத்தொடர்கள்..நீர் அருவிகள்.. மேக அடுக்குகள் ..வரிசையாக பறந்து வரும் வெள்ளைக் கொக்குகள் ..பொண்வண்டுகள்.. தட்டான்கூட்டம்..வண்ணத்துப் பூச்சிகளின் .அணிவகுப்பு...வயல் வரப்புகளில் நின்றுக் கொண்டு இரயிலையும் நம்மையும் பார்த்துச்  டா டா சொல்லும் சிறுவர் ..சிறுமிகள்...விவசாயிகள்..   அவர்களின் கள்ள கபட  மற்ற    வெள்ளந்திச் சிரிப்பு...மனதில் மகிழ்வை பொங்கச் செய்யும்.  இரயில் நேராக ஓடுகிறதா  இல்லை வளைந்து சுழன்று  கொண்டு ஓடுகிறதா      ...எல்லாம் நம்மைச் சுற்றி பின்னால் ஓடுகிறதே என்று வியப்பு தோன்றும்    ..                                          இப்படி ஜன்னலோர பயணம்...மகிழ்வைத் தந்தாலும்...மனதிற்கு வருத்தத்தையும் தரும் .         ஒவ்வொரு இரயில் நிலையத்தில் நிற்கும் போதும்...அருகில்  வசிப்பவர்கள் பெட்டியில் குடங்களுடன் ஏறி பாத் ரூமில் இருந்து தண்ணீர் பிடித்துச் அவசர அவசரமாக இறங்கிக் செல்வதும்...வெள்ளரிகாய்..சுரைக்காய்.. முருங்கை...பூசணி..கொய்யா .. வாழை ..பனை வெல்லம்...குச்சிக் கிழங்கு... நொங்கு இவைகளை மடி நிறையக் கட்டிக் கொண்டு ...வாங்குகிறோமோ இல்லையோ பார்த்தாலேப் போதும்.. நம் மடிமீது வைத்து..காசுக்கு கை நீட்டி நிற்பதும்..இவர்களை முட்டித் தள்ளிக் கொண்டு.. பனை ஓலையில் மடித்துக் கட்டிய கைப்போன்ற மட்டையில் பதநீர் .. தெளுவு ... விற்பனை செய்பவர்களின் ஆளுமையும் தவிர்க்க முடியாத  இன்னலைத் தரும்.                                                    இதில் பதநீரைத் தான் பெரும்பாலும் வாங்கிக் குடிப்பார்கள்.. பதநீர் ஒரு வித்தியாசமான மிதமான உவர்ப்பு கலந்த இனிப்புச் சுவை கொண்டு இருக்கும். பனை மரத்துப் பாலில். சுண்ணாம்பு கலந்து. பதநீர் தயாரிக்கிறார்கள் இதில் கால்சியம்..இரும்புச் சத்து நிறைய உள்ளது.. உடலுக்கு குளிர்ச்சி...        இவைகளைக் கடந்து மீண்டும் பயணிக்கும் போது இரயிலின்  வேகம் கூடும்.இன்னும் வேகத்தை அதிகரிக்க ..என்ஜினில் நிலக்கரியை அள்ளி அள்ளி... எரியும் நெருப்பில் போடுவார்கள்.நிலக்கரி பட் ...பட் என்று வெடித்து தீ பற்றி எரியும்...வெள்ளைப் புகையும் நீராவியும் திடுமென கிளம்பி எஞ்சினை சூழ்ந்துக் கொள்ளும்....  ..உய்.. ய் என உரக்க.   கூவிக்கொண்டு... டாங்க். டாங்கு என வேகமெடுக்கும் ...                         ஜன்னல் வெளியே எட்டிப் பார்த்தால்....கண்ணில் நிலக்கரியின் பொடி வந்து சரியாக விழும்...முகத்திலும்..புதிதாகப் போட்டு இருக்கும் புது சட்டையிலும் மூக்குப் பொடி போன்ற கருப்பு நிற சாம்பல் கரி ....பொல... பொல வென விழுந்து விடும்.... தொட்டுத்             தட்டிவிட்டால்...வெள்ளைச் சட்டை கருப்புச் சட்டையாக மாறிவிடும்...கண்ணில் விழுந்த கரியை எடுக்க கண்ணை கசக்கினால்.. கண்ணுக்கு மை தீட்டியதுப் போல கருமை ஆகிவிடும்.. கை விரலால் கன்னம்    தொட்டால் .. கன்னமும் கருமை வண்ணம் கொள்ளும்....                                      கட்டை சீட்டில் உட்கார்ந்து வருவது...ஒருவித உடல் உபாதை தான் என்றாலும்.....இந்த இரயில் பயணம் நம்மை ஒரு வித்தியாசமான உலகிற்கு அழைத்துச் சென்று..உள்ளத்தையும் உடலையும் உருமாற்றம் செய்து அந்த பயண நேரத்தை  உற்சாகப் படுத்தி விடும் ...                                   ஒருவழியாக பயணத்தை முடித்து...  இரயில் நிலையம் விட்டு ஊருக்குள் நுழையும் போது...சிரித்துக் கொண்டே...இரயிலில் வந்தீர்களா..என்று எதிர் வருபவர்கள் கேட்டும் போது. ஹி.. ஹி.. ஹி... ஆமா ..எப்படி கண்டு பிடித்தீர் கள்...என்று...பதிலுக்கு சிரித்து சமாளிக்க வேண்டியதிருக்கும்.   என்ன இருந்தாலும் இரயில் பயணம்...ஒரு வித்தியாசமானது....உள்ளத்துக்கு உற்சாகத்தைத் தர கூடியது தான்..       ஹோட்டல் செல்வத்தில். உணவு முடித்த பிறகு....திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அப்பா.... சேலம் செல்லும் ATC பஸ் நிற்கும் இடம் தேடினார்...அதன் இடத்தில் நேற்று இரவு நாங்கள் சேலத்தில் இருந்து திருச்சி வந்த பஸ் நின்றுக் கொண்டு இருந்தது.அதைப் பார்த்ததும் அப்பா வெறுப்பாகிப் போய்விட்டார்.                                           ATC பஸ் எப்போ...வரும் என்று கேட்டதற்கு  இந்தப் பஸ் போன பிறகு வரும் என்றார்கள் ..இந்தப் பஸ் எப்போ போகும் என்றால்..இன்னும் இருபது நிமிஷம் ஆகும் என்றார்கள்....       பொறுமை....தேவைப் பட்டது....                                               நேற்று சேலத்தில் இருந்து திருச்சி வர பஸ் பிடிக்க காத்து இருந்த போது....ஒரு பஸ்சின் கண்ணாடி முகப்பில் express விரைவு வண்டி என்று எழுதியிருந்தது. அந்த பஸ்சின் கண்ணாடி...மற்றும் அதன் சுற்றிலும் விரலில் சுண்டி அடித்த சந்தனத்தின் துளிகள் அரச இலைப் போல ....பூஜை செய்யப்பட்டு இருப்பதையும்...அந்த பஸ் விரைந்து செல்லக் கூடிய விரைவு வண்டி என்பதும்.. அந்த  பஸ்சின் பெயர் பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் வகையில். ...ஶ்ரீராம ஜெயம் என்றும் இருந்தபடியால் அப்பா ATC பஸ்யை தவிர்த்து இந்த பஸ்சில் ஏறி இருட்டுவதற்குள் திருச்சி செல்ல தீர்மானித்தார்.இடது புறம் இருந்த இருவர் அமரும் நடு பகுதி சீட்டில் என்னை ஜன்னல் ஓரம் அமர்த்தி அப்பா அருகில் அமர்ந்து கொண்டார்.          பசி நேரம்...                                      பஸ்சில் பயணிகள் ஏற .... ஏற...வெய்யலின் வெப்பமும் ஏறிக் கொண்டே இருந்தது. பஸ் நிறைந்து இரண்டு மூன்று பேர் டிரைவர் அருகே நின்றப் பிறகுதான் கண்டக்டர் விசில் ஊதி ...போலாம் ரைட் ....என்றார்... அப்பாடா ..பஸ் புறப்பட்டு விட்டது ...இது விரைவு வண்டி விரைந்து செல்லும்..உள்ளத்தில் உற்சாகம்.      ஊற்று எடுத்தது...                           திருச்சி நோக்கி முதல் பயணம்... எதிர் கால வாழ்க்கைக்கான படிப்பைத் தேடி     புதுப் பயணம்..     என் அருகில் அமர்ந்து இருக்கும் அப்பா...அவர் இருக்கும் பொழுது என்ன கவலை   ....    என்ன பயம் ....                         நான் படிக்க விரும்பியது சட்டம்...படித்து வக்கீல் ஆகவேண்டும்...அல்லது. பட்டம் பெற்று காவல் துறை அதிகாரி ஆக வேண்டும்...காரணம் என்னிடம் இருந்த ஸ்போர்ட்ஸ் சர்டிபிகேட்... உடல் அமைப்பு. .ஆனால் ..இந்த இரண்டுமே என் விருப்பப்படி நிறைவேற வில்லை..இப்பொழுது அப்பாவின் விருப்பபடிதான்  என்ஜினீயரிங் படிக்கப் போகிறேன்   ..அதுவும் மேட்டூர் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடட் ...அப்பா பணியாற்றும் கம்பெனியின். ஸ்பான்சரில்  SIT யில் படிக்க ஷீட்....மூன்று வருடங்களுக்கும் படிக்க கம்பெனியின் பணவுதவி..மேட்டூர் கெமிக்கல்ஸ் யின்  மேனேஜ்மென்ட். பள்ளியான வைத்தீஸ்வரா  உயர்நிலைப் பள்ளியில்  படித்த ....அந்த மேட்டூர் கெமிக்கல்ஸ் கம்பனியில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகள் ...பள்ளி இறுதி வகுப்பில்...கணக்கு மற்றும் சையின்ஸ் பாடங்களில் முதல் ஐந்து  ரேங்க் எடுப்பவர்களுக்கு . SIT யில்.  படிக்க சீட்...மூன்று ஆண்டுகளுக்கு படிப்புக்கு பணவுதவி....கெமிக்கல்ஸ் கம்பனி செய்யும்...இதற்கான மேட்டூர் கெமிக்கல்ஸ் கம்பனியின்  அதிகாரி திரு .சந்தானம் சார் அவர்கள்...அவரது சிபாரிசு கடித்ததில் ...கிரிதரன்...வெங்கடேசன்...நான்.. ரவிகுமார்... ஶ்ரீதரன் ஆகியோர்..SIT யில்  படிக்க தேர்வு பெற்று இருந்தோம்....                          அப்பாவிடம்  என் படிப்பின் விருப்பத்தை தெரிவித்தபோது ...அப்பா..சொன்னார்..                  .இந்தப் படிப்பு மூன்று வருடங்கள் தான்..நீ விரும்பும் படிப்பு ஆறு ஏழு     வருடங்களுக்கு  மேலாகும்   .உடனே வேலை கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது...  .. இந்தப் படிப்பு.... நீ படித்தவுடன் வேலை கிடைக்கும்...   இப்போது    இருக்கும் நம் வீட்டின் பொருளாதார சூழ்நிலைக்கு...கெமிக்கல்ஸ் கம்பனி யின் உதவி கிடைத்து இருக்கிறது.. இதையே படி...இது அப்பாவின் விருப்பம்..                                          தாயிற் சிறந்த கோவிலும் இல்லை..தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை...                                            இப்படி அப்பாவின் விருப்பபடி ....மூன்று ஆண்டுகளுக்கு பண உதவியோடு படிக்க ....தொடங்கிய இந்த பஸ் பயணம் எனக்கு பெருமையாகவே  இருந்தது.       கூட்டம் இப்பவே நிறைந்து விட்டது...நடுவில் நிற்க்காது என்று நினைத்தால் ..                                       .பஸ் நிலையத்தை விட்டு வர வர..இராசிபுரம்...நாமக்கல்...என்று டிக்கட் ஏற்றிக் கொண்டு ... பஸ் வெளியே வரும்போது பதினைந்து நிமிடங்களுக்கு  மேலே ஆகிவிட்டது... நாமக்கல்லை பஸ் கடந்த பிறகு தான் நின்று அடைத்துக் கொண்டு வந்த கூட்டம் குறைந்தது...வெளிக் காற்றே உள்ளே வர ஆரம்பித்தது....வந்த காற்று நல்ல காற்று என்று இழுத்து சுவாசித்தால்...இருபக்கமும் இருந்த கோழிப்பண்ணையின் ...நாற்றம் நாலு கிலோ மீட்டர் தூரம்  துரத்திச் கொண்டு  வந்தது... பசி நேரத்தில்...இந்த நாற்றம் ...வயிற்றை குமட்டிக் கொண்டு வந்தது....பயணிகள் இறங்குவதும் ஏறுவதும்...பஸ் நிற்கும் போதெல்லாம் தொடர்ந்து கொண்டு இருந்தது... எதிர் பார்த்தப் படி பஸ்சின் வேகம் ஏமாற்றத்தை தந்தது...முசிறி நெருங்க நெருங்க...வலது புறம் வளைந்து வரும் காவிரியின் மணற் பரப்பில் நடுவில் விரல் வைத்து கோடு கிழித்த துப் போல.  நீர் ஓடிக் கொண்டிருந்தது.... பச்சை நிறத்தில் நெல் வயல்களும் ....மஞ்சள் விளைச்சலும்... குலை தள்ளிய வாழைகளும்.. தென்னத்                  தோப்புகளும் ...கண்ணுக்கு எட்டியதூரம் கண்ணுக்கு குளிர்ச்சியாக காணப்பட்டது... முசிறியில் பஸ் நின்ற போது..ஓரளவுக்கு கூட்டம் குறைந்தது .. மூங்கில் கூடையில் சீப்பு ... சீப்பாக... வாழைப் பழங்களையும்...வெள்ளரி பிஞ்சுகளையும்..சின்ன சின்ன வெற்றிலைகளையும்...தலையில் வைத்துக் கொண்டு பஸ்சின் ஜன்னல்களை முட்டிக் கொண்டு ... ஈ மொய்ப்பதுப் போல....விலை கூவி விற்றார்கள்...அப்பா ...இரண்டு சீப் வாழைப் பழங்களை வாங்கி என் மடி மீது வைத்து ...ஒரு  சீப் பழத்தை தான் எடுத்துக் கொண்டு...ஒன்றை என்னை சாப்பிடச் சொன்னார்....பஸ் புறப்பட்டு சிறிது நேரத்தில்...பஸ்சில் இருந்து இருபுறமும் வாழைப் பழ தோல்கள் வீசி எறியப் பட்டன.      இதை இப்போது பதிவிடும் போது...நான் 1993 ஆம் ஆண்டு...   மந்த்ராலயம் சென்ற போது நிகழ்ந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது...              தென்னக இரயில்வேயில் ...  வேக்குவம் பிரேக் சிஸ்டம் ஏர் பிரே க்கிற்கு மாற்றம் செய்யப் பட்ட போது...எங்களுக்கு ஏர் பிரேக் சிஸ்டம் பற்றிய பயிற்சி ...வகுப்பு ...ஒரு வாரத்திற்கு தென்னக  இரயில்வே சார்பாக  ஆந்திராவில் உள்ள குத்தி யில் வழங்கப் பட்டது..அந்த பயிற்சி பெற ...என்னோடு சுப்ரமணி....தேவராஜ்... ஜோலார்பேட்டை சந்திப்பில் பணிபுரிந்த .. . முது நிலை டெக்னீஷியன்கள் வந்து இருந்தார்கள்.  ஆறு நாட்கள் அந்த குத்தியில் பயிற்சி பெறுவது என்பது மிகக் கடினமாக இருந்தது...புதிய டெக்னாலஜி என்பதால்..புரிவது சற்று சிரமமாக இருந்தது... உணவு பிரச்சினை எங்களை படாத பாடு படுத்தியது...எங்கும் தமிழ்...எதிலும் தமிழ் என்பது போல...அங்கே ..எங்கும் எதிலும்...காரம் ..மிளகாயின் காரம்..மிக அதிகம்..மிளகாய் பச்சி ..மிளகாய் வத்தல்..மிளகாய் பொடி..மிளகாய் சாம்பார்..மிளகாய் சட்னி...அந்த சிகப்பு நிறத்தைக் கண்டாலே...கண்கள் சிவந்தன...கைகள் எரிந்தன...உதடும் வாயும்.... வீங்கி தடித்துப் போயின. மதிய உணவுக்காக நாங்கள் இரயில் பிடித்து குண்டக்கல் செல்வோம்.அங்கே உணவு நம்ம தமிழ் நாட்டு உணவு போல சரியானதாக இருக்கும்... பயிற்சி முடிந்த பிறகு...நாங்கள்...திருப்தி சென்று..அந்த   ஏழுமலையானை..வாழ்நாளில்...  முதன் முதலாக தரிசித்து...மன அமைதி கொண்டோம்...பிறகு.... மந்தராலயம் ரோட்டில் இறங்கி...பஸ் பிடித்து....மந்த்ராலயம் செல்ல ஆரம்பித்தோம்...பஸ்சில் ஏறியதும்...நாலைந்து வாழை பழ         சீப்புகளை இரண்டு கைகளிலும்       தூரி போல தூக்கிக் கொண்டு ...இரண்டு சீப் வாழைப்பழம் ஒரு ரூபாய் என்றார்கள்....நான் ஆச்சரியப் பட்டேன்...இன்னும் ஒரு சிலர் எழுபத்து ஐந்து பைசாவுக்கு விலை கேட்டார்கள்...ஒரு ரூபாய்க்கு  மூன்று சீப் வருமா என்று கேட்டத்திற்கு ...மடிமீது வைத்து விட்டார்கள்..நாங்கள் மூவரும் மூன்று ரூபாய் கொடுத்து ஆறு சீப் வாழைப் பழங்களை வாங்கிக் கொண்டோம்...பஸ் புறப்பட்டது... சார் இது தான் இன்றைய மதிய உணவு சாப்பிடுங்கள் .  ..என்று என்னவர்கள் சொன்னார்கள்..நானும் ஒன்று ..இரண்டு..மூன்று என்று ஆரம்பித்தேன்...ஒரு சீப் பழம்                      ஓடிவிட்டது...பஸ்சின் ஜன்னல்கள் வழியே வாழைப் பழ தோல்கள் வீசி எறியப் பட்டன....மஞ்சள் நிற         தோல்மழை தொடர்ந்து கொண்டே இருந்தது...வயிற்றின் பசி போன பிறகு.....அந்த துங்கப் பத்திரா...நதிக் கரையின்...பசுமை...கண்ணிற்கு விருந்தாக அமைந்தது.நெல்லும்  வாழையும் நிறைந்து காணப் பட்டனஶ்ரீ.ராகவேந்திரா சுவாமிகளின் ஜீவசமாதி கண்ணில் தெரியும் போது....பஸ் நிறுத்த பட்டது.கைகளில் மீதம் வைத்து இருந்த வாழைப் பழங்களை பிய்த்து வெளியே எறிய ஆரம்பித்தார்கள்..நாங்களும் எங்களிடம் இருந்த எல்லா பழங்களையும் தூக்கிப் போட்டோம் ..நூற்றுக் கணக்கான இராம தூதர்கள்..ஓடிவந்து பழங்களை பிடித்து சாப்பிட்டார்கள்
.பஸ் நகர ஆரம்பித்தது...                            அந்த துங்கபத்திரா....நதியில் இறங்கி குளிக்க ஆரம்பித்தோம்... இடுப்பு அளவு நீர் சில் என்று தவழ்ந்து கொண்டு இருந்தது. நீர்      ஓடுகிறதா.... நீர் ஓடுகிறது என்றால் நீரில் அசையும் பொருள்கள் கலந்து இருக்க வேண்டும்.அப்பொழுது தான் நீரின் அசைவு தெரியும்...ஆனால் இந்த துங்கபத்திரை ஆற்றின் நீரில் கலப்பு எதுவும் இல்லை.. தெள்ளத் தெளிவாக நீர் கண்ணாடி போல் ஓடிக்கொண்டு இருக்கிறது... நீரின் அடியில் தரை....கற்கள் பாறைகள் தூசு ... மாசு இன்றி கண்ணுக்குத் தெரிகின்றன.சுத்தமான அழுகற்ற நீர்... குளிர்ந்த நீரில் குளிக்கும் போது....உடலும் உள்ளமும் குளிர்ச்சி அடைகின்றன.மெல்லிய காற்றை சுவாசிக்கும் போது மனசு லேசகிறது... எவ்வளவு நேரம் முழுகி முழுகி குளித்தோம் என்பது தெரியாது...அந்த ஆற்று நீரின் அருமை அவ்வளவு குளுமை...ஶ்ரீராகவேந்திரர் ஜீவசமா தியைப் நெருங்கி உள் நுழையும் போது..மேல் சட்டையை கழட்ட சொன்னார்கள்...அங்கு இருந்த சுவர்களின் மீது ஶ்ரீராகவேந்திரர் வாழ்க்கை வரலாறு ஓவியமாக வரையப் பட்டு இருந்தது.குறிப்பாக முஸ்லிம் திவான்...மாமிசத்தை...  வாழை இலையில் மறைத்து வைத்து ....சாப்பிடுங்கள் என்று அவரை அவமானப் படித்தியது.. துங்க பத்திரா  நதியின் புனித நீரை அதன் மீது தெளித்து அந்த மறைத்து          வைத்து இருந்த மாமிசத்தை... மணம் வீசும் சுவை மிகுந்த மாம்பழங்களாக மாற்றிய நிகழ்வும்...ஆற்றங்கரை ஓரத்தில் இருந்த அகன்ற பெரிய கற் பாறை மீது அமர்ந்து ..வரும் எண்ணற்ற மக்களுக்கு நோய் தீர்த்து அருள் வழங்கிய பதிவும்... மெய் சிலிர்க்க வைத்தன ...ஜீவ சமாதியை தரிசிக்கும் போதும்..அதில் பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ஜீவ ஜோதியை காணும் போதும் நெஞ்சம் நெகிழ்ந்து போனது..தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்த போது...மனம் அமைதி கொண்டது........ஓம் ஶ்ரீ ராகவேந்திரா......                            மீண்டும் பஸ்சில் ஏறி அமர்ந்து பயணம் தொடங்கும் போது..அதே வாழை பழத்தின் வாசனை பஸ்சில் இருந்து வர ஆரம்பித்தது... மந்த்ராலயத்தில் இருந்து  மீண்டு வரும் போது தொட்டியம் வந்து இருக்கிறது..அப்பா...தொலைவில் தெரிந்த கரும்பு தோட்டத்தை சுட்டிக் காட்டி...கரும்பின் மேல் வெள்ளையாக தெரிகிறதே அது தான் ...கரும்பு பூ... என்றார்..நெடுக இருந்த கரும்புத் தோட்டங்களில் அதன் தலையில் ஊதாவும் வெள்ளையும் கலந்த நிறத்தில்..விரல்களை பிரித்து விரித்தது போல கரும்பின் பூக்கள் மலர்ந்து வளைந்து காற்றில் ஆடி கண்ணைப் பறித்தன..கரும்பு பூ பூக்கும் என்பது எனக்குத் தெரியாது...இப்பொழுது தான் நேரில் பார்க்கிறேன்..நெல் அறுவடை செய்து இருந்த வயல்களில் வண்ண மயில்கள் ஓடி செல்லும் காட்சி ..இதுவும் நான் முதல் முதலாக பார்க்கும் முதல் காட்சி...    இப்படியாக... போய்க்கொண்டு இருந்த ஶ்ரீ ராம ஜெயம் விரைவு பஸ் ஐந்து மணி நேர ஆமை வேக பயணத்திற்குப்  பின்.... வழியில் வந்தவரை எல்லாம் வாரி அனைத்து ஏற்றி .நெருக்கி....இறக்கி...திருச்சி வந்து சேரும் போது.. தலை உச்சியில் இருந்த சூரியன் ...முகத்தில் அடிக்கிறான்...அடித்துப் பிடித்து அவசர கதியில் அரியமங்கலத்தில் SIT  கேட் முன்பு இறங்கும் போது தான்.. .அப்பாவுக்கு அளவிட முடியாத கோபம்..எனக்கும்...இந்த அயராத.    ஐந்து  மணி நேர பிரயாணத்தில்....ஶ்ரீ ராம ஜெயம்...பத்தாயிரத்து ஒரு முறை எழுதி இருக்கலாம் என்று தோன்றியது ..அதன் பிறகு இது வரை அரசு பஸ் தவிர அந்நியர் பஸ்சில் பயணம் செய்வதில்லை..."சேலம் வசந்த் '"             19.03.2025

Comments

  1. கனிவான மறக்க முடியாத எண்ணங்கள் . அப்பாவின் நினைவும் மனதில் ஈரம் கசிய வைக்கிறது .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆத்மா

ராகம்

நாராயணி கண்ணகி.