ஆத்மா
1980 ஆம் வருடம்...திருச்சி SIT யில் இரண்டாம் வருடம் Mechanical Engineering படித்தப்பொழுது...Annual day முடிந்தப் பிறகு...பொங்கல் பண்டிகையின் விடுமுறையும் சேர்ந்துக் கொண்டதால்....ஒரு ஆறு நாள் கல்லூரி விடுமுறை...அந்த விடுமுறையில்..... இந்த ஜனவரி மாதக் குளிரில்...மலைகளின் ராணி....ராணி..ராஜக்குமாரி... என்றாலே....அழகான...அமைப்பான உடலோடு..அங்கமெல்லாம் தங்கமாக...தங்கமே நிறமாக... இப்படியே வர்ணிக்கும்...தொடர்ச்சியாக....ஒவ்வொருவருடைய., மனதையும் வசீகரிக்கும் வனப்பு நங்கையாக... கண்ணுக்குக் குளிர்ச்சியாக...கவர்ந்து இழுக்கும் காந்தக் கன்னியாக விளங்கும்... ஊட்டி என்கிற நீலகிரி சென்று இருந்தேன். ஈரோட்டில் காலை 8.20 க்கு அரசு பஸ் பிடித்து உட்கார்ந்தால் 12.30 க்கு ஊட்டி வந்துவிடும்.... வெய்யில் காலத்தில் பஸ் பிரயாணம் என்றால்...முகத்தில் அனல் காற்று அறைந்துச் செல்லும்... உடல் முழுக்க வியர்த்துக் கொட்டும்...தொடர்ந்து குஷன் சீட்டில் உட்கார முடியாது...இடுப்புக்குக் கீழே அடியில் அனல் அடுப்புப் போல சூடு மேலே எழும்பி.... நெஞ்சுக்குத்தாவி கழுத்தை வளைத்துச் சுடும்..கொஞ்சம் சூட்டைத் தணிக்க அடிக்கடி எழுந்து நின்று காற்று வாங்க வேண்டும் ...அப்படி அடிக்கடி எழுந்து நிற்கும் போது பக்கத்தில் உட்கார்ந்து ... கை வைக்கக் கூட இடம் கொடுக்காமல் முழு hand rest யும் ஆக்கிரமித்துக் கொண்டுவரும் சகப்பயணிக்கு சலிப்பு ஏற்படும்..ஆனால் அவர்...நம்மீது சாய்ந்துக் கொண்டு வருவதை தாங்கிக் கொள்ள வேண்டும்.. ஐந்து விரல்களையும் மடக்கி.... பீடியைப் தீ பற்ற வைத்து குனிந்து புகையை முழங்கால் சந்தில் அவர் விடுவதை...மீண்டும் நாம் மூக்கில்... தவிர்க்க முடியாமல் ....அந்தப் புகையை இழுத்து..இழுத்து...சன்னல் வெளியே விரட்ட வேண்டும்..மேலும் ஜன்னல் வழியாக...சிறீப் பாய்ந்து வரும் காளைமாட்டின் இருப்புற மூக்குக் காற்றுப் போல சுழன்று எகிறிவரும் புழுதிப் புகை முகத்திலும் தலையிலும் அப்படியே அப்பிக் கொள்ளும். எதிர் வரும் பஸ்கள் கடந்துச் செல்லும் போது ஏற்படும் புழுதி மழை ...அடடா....சொல்லி மாளாது.இவைகளோடு அடுத்து வரும் பஸ் நிறுத்தம் வரும்வரை...மனித வியர்வை கலந்து வரும் காற்றைச் சுவாசித்துக் கொண்டு...பொங்கி எழும் அடிச்சூட்டையும் தாங்கிக் கொண்டு வரவேண்டும்... இவைகளை யெல்லாம் முற்பிறவியின் பயன் என்று....சகித்துக் கொண்டு..... அப்படா..அப்பாடா...என்று...இடுப்பை வளைத்து நெளித்துக் கொண்டு வர வேண்டும்... இது போன்ற இம்சைகளை ....இந்த ஜனவரி மாதக் குளிரில் பஸ்சில் பயணம் செய்யும் போது சௌகரியமாகவே உணரமுடியும்... மேட்டுப்பாளையத்தை நெருங்க... நெருங்க..அந்த நீலகிரி அரசியை காண முடிகிறது...வானத்தில் மிதந்துக் கொண்டு இருக்கும் மேகங்கள் எல்லாம் அப்படியே கீழெ விழுந்து அந்த பச்சை மலையின் அகன்ற நீண்ட உயர்ந்த ...வளைந்து நெளிந்த தொடர் முழுதும் அப்பிக் கொண்டதுபோல.... வெளிர் நிறத்தில் ... பனிப்போர்வையாக...பார்வையை இழுக்கிறது... மலை உச்சித் தொட்டு திரும்பி வரும் ஊதல் காற்று உடம்பை உசுப்புகிறது. மேட்டுப் பாளையம் தாண்டி ... மலைப் பாதையில் பஸ் ஏற.. ஏற...வேகம் குறைகிறது.காரணம் ... மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் அதிகமாக ஏறியப் பயணிகளா...பஸ் தலை மீது நெருக்கிப் போடப்பட்ட மூட்டைச் சுமைகளா...மெதுவாக மேலே மேலே உயரும் மலைப் பாதையா... மெதுவாகப் பயணிப்பது ஒரு தனித் சுகம் தானே... இருவர் இருக்கையில் மூன்றுப் பேரும்... மூவர் இருக்கையில் நான்குப் பேராக அமர்ந்து கொண்டதால்... இரண்டுப் பக்கமும் காற்று வர வழி ஏற்ப்பட்டது..இதனால் இருபுறமும் அடர்ந்து வளர்ந்திருந்த பாக்கு மரங்களின் தலை உச்சியையும் அதன் கழுத்தில் மாட்டுச் சலங்கைப் போல சுற்றிலும் காய்த்துத் தொங்கும் பாக்குக் குலைகளையும்.... காண வசதி ஏற்ப் பட்டது...முதல் hair pin bend ல் bus சல்லென்று வளையும் போது... கைப் பிடியைச் சரியாகப் பிடிக்காதவர்கள் சறுக்கி விழுந்தார்கள்...குழந்தைகள் அம்மாவென்று கத்த ஆரம்பித்தனர் .பின்னாடி சீட்டுக் கடியில் இருந்து ஒரு ...கோழி ...கோ.. கோ வென்று சத்தமாகக் கத்தத் தொடங்கியது ... இரண்டாவது hair pin bend ல் வளையும் போது... டிரைவர் பக்கத்தில் இருந்தவர்கள்... ஓ.. ஓ...வென்று வாந்தி எடுக்க ஆரம்பித்தார்கள்... ஒரு சிலர் பழுத்த எலுமிச்சை பழத்தை மூக்கில் நுழை ப்பது போல வைத்து சுவாசித்துக் கொண்டு வந்தார்கள்... மூன்றாவது திருப்பத்தில் திரும்பும் போது ...அடிவயிற்றில் இருந்து. பொங்கி வருவதுப் போல ஒரு காற்று அழுத்தப் பந்து தொண்டை நோக்கி வந்தது... காது இரண்டும் அடைத்துக் கொண்டது.இது ஒரு சில நிமிடங்கள்தான்... மேலே ஏற ஏற குளிர் அதிகமானது...கம்பளி சுவெட்டர் போடாதவர்கள் எல்லாம் பையில் இருந்து எடுத்து ... முழங்கையால் பக்கத்தில் இருந்தவர்களின் முகத்திலும் தாடையிலும் இடித்துப் போட்டுக் கொண்டு சரியாக இழுத்து விட்டுக் கொண்டார்கள். அந்தக் குளிரில் நெருக்கி அடித்துக் கொண்டு ஒருவரோடு ஒருவர் நெருங்கி உட்கார்ந்து இருந்தது ....உடலுக்கு சூடாக...சுகமாக இருந்தது . ஒவ்வொரு வளைவுகளையும் கடந்து செல்லும் போது வெள்ளைப் போர்த்திய பச்சை மரங்களின் இடையே வெள்ளியாக உருகி தாவி விழும் நீர் அருவிகள் கண்ணுக்கு குளிர்ச்சி அளித்தன . பெயர் தெரியாத உயர உயரமான மரங்களெல்லாம் உச்சியில் பூத்து தலையாட்டின ... இனம் தெரியாத செடிக் கொடிகளில் மலர்ந்த மலர்களின் மணம் முகத்திற்கு எதிரே எழுந்து மயக்கத்தை ஏற்ப்படுத்தின. நான்கு மணி நேரம் போனதே தெரியவில்லை... மேலே . மேலே ஏறி... வளைந்து வளைந்து தாவி...அந்த முப்பத்தாறு ஊசிமுனை வளைவுகளையும். உந்தித் தள்ளி ஊட்டிப் பேருந்து நிலையத்தை வந்து சேர்ந்தால் சேறும் சகதியுமாக இருக்கிறது.வெளியேப் எட்டிப் பார்த்தால்...அங்கு இருந்தவர்கள் அனைவரும் பெரும்பாலும் கம்பளி கோட் சூட் boot அணிந்து இருந்தார்கள்... சிறிது நேரம் தூறல் போட்டு மெதுவாக நின்றது...வெய்யிலும் கொஞ்ச நேரம் தலைக் காட்டியது. பசிக்கு நாலு ஊட்டி வர்க்கி.. ஒரு முழு டம்ளர் சாயா சாப்பிட்டு...நஞ்சநாடு செல்லும் பஸ் பிடித்தேன். அரை மணி நேர பயணத்துக்குப் பின் ... ஊட்டிக்கு மேற்கே இருக்கும் நஞ்சநாடு ...இதன் நடுவில் இருக்கும் M . பாலாடாவில் இறங்கிக் கொண்டேன்.. M. பாலாடா என்பது முத்தொரை பாலாடா என்பதே...இங்கு உள்ள ஒரு உயரமான குன்றின் மீது இந்திய விண்ணியல் ஆராய்ச்சி மையம் செயல் படுகிறது.... சிறிது நேர வெயிலும் தூறலும் மாறி மாறி வரும் அந்த மதிய நேரத்தில்...கண்ணுக்குத் தெரியும் தூரத்தில் இருந்த ஒரு சிறிய குன்றின் மேல் ...காம்பவுண்ட் சுவர் மெயின் கேட் இல்லாமல் கட்டிடத்தோ டு மட்டும் இருந்த ..அந்த அரசு உயர் நிலைப் பள்ளியைச் சென்றடைந்தேன் .... அப்போது பள்ளி ஆசிரியர்களும்... மாணவ மாணவியரும் வகுப்பறையை விட்டு வெளியே உள்ள அகன்ற பச்சைப் புல்வெளியில் வந்து நின்றுக் கொண்டு ...வெயில் காய்ந்துக் கொண்டு இருந்தார்கள். நம்ப ஊரில் உள்ளப் பள்ளிகளைப் போல மாலை நாலரை மணி வரை வகுப்பு அங்கு மலைப் பகுதியில் நடப்பது இல்லை.மழை மேகம்... பருவ நிலைக்கு ஏற்ப பள்ளி வேளை நேரம் இருக்கும்...மாலையில் மூன்று மணிக்கெல்லாம் பள்ளி முடிந்து விடும்...திடீரென மழை மேகம் கீழே இறங்கி விடும்.. பனிப் பொலிவு பொல பொல வென கொட்டத் தொடங்கும்...மேகம் வந்து கவ்விக் கொண்டு உடனே இருட்டி விடும் . பள்ளிக்குள் நுழைந்த என்னைப் பார்த்ததும்..ஒரு சில ஆசிரியர்கள்... மாணவர்களை உடனடியாக அவரவர் வகுப்புக்குச் செல்லச் சொன்னார்கள்...மாணவர்கள் யாரோ வருகிறார்கள் என்று பயந்து அவரவர் வகுப்பில் நுழைய ஓடினார்கள்...இரண்டு ஆசிரியர்கள் மட்டும் அங்கேயே நின்று...எனக்கு கைக் கூப்பி வணக்கம் தெரிவித்தார்கள்...நானும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தேன்...அவர்கள் மெதுவாக ..வாங்க சார் என்று என்னை...வரவேற்றார்கள்... எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. பள்ளி வகுப்பறையில் இருந்து மாணவர்களும் ஆசிரியர்களும் என்னை எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்க...இங்கே இரண்டு ஆசிரியர்கள்...மிக மரியாதையுடன் வரவேற்பு கொடுக்க....வகுப்பு முடிய இன்னும் அரைமணி நேரம் இருக்கு... குளிர் அதிகமானதால்...நாங்கள் தான்..மாணவர்களை வெளியே வெயிலில் வரச் சொன்னோம் என்று...அவர்கள் வகுப்பு நேரத்தில் வெளியே வந்ததற்க்கான காரணத்தை மெதுவாகச் சொன்னார்கள். நான் யார் என்பதைச் சொல்லியே விட்டேன். நான் டீச்சர் கனகாவின் தம்பி.. சேலம் மேட்டூரில் இருந்து வருகிறேன் என்று. அப்படியா என்று அவர்கள். ஆஹ்...ஹ ..ஹா என்று சிரித்தார்கள்...நானும் நமட்டுச் சிரிப்பு சிரித்தேன்... இது நடந்து ஒரு சில நிமிடங்களில் ...நூலகத்தில் புத்தகங்களை அடுக்கிக் கொண்டு இருந்த என் சகோதரி கனகா வெளியே வந்தார்... என்னைப் பார்த்ததும் தம்பி என்றார்...வந்து இருப்பது தமிழ் டீச்சர் கனகாவின் தம்பி என்று தெரிந்ததும்..வீட்டுக்குச் செல்லும் நேரத்தில் யாரோ inspection வந்து விட்டார்கள் என்று நினைத்து வகுப்பில் இருந்த அனைவரும் வெளியே வந்தார்கள்... எங்களைச் சுற்றி நின்ற அவர்களைப் நான் பார்த்ததும்...குறிப்பாக என்னை அதிசயமாக அவர்கள் பார்த்ததும்... எனக்குச் கூச்சத்தை ஏற்படுத்தியது... ஒரு ஆசிரியர் கேட்டார்...இவ்வளவு உயர மலையில்... மழை ஈரத்தில்...ஜனவரி குளிரில்...எப்படி..ஒரு சாதாரண cotton shirt...pant ஒரு செப்பலுடன் உங்களால் இங்கு வர முடிகிறது... நான் சொன்னேன்...plain area வில். வெய்லில் காய்ந்து போன எனக்கு...இங்கு வந்தது AC யில் இருப்பது போல இருக்கு...இன்னும் இரண்டொரு நாள் தங்கினால்தான் தெரியும்...உடம்பு தாங்குமா இந்த மார்கழி மாதக் குளிரை என்று. மேலும்..நான் திருச்சியில் படிப்பதைச் சொன்னேன்...ஆச்சரியமாகக் கேட்டார்கள்...அந்த ஊரைப் பற்றி ஆர்வத்தோடு விசாரித்தார்கள்.பின்னர் ஒவ்வொருவருடைய அறிமுகத்திற்கு ப் பிறகு அவர்களின்... ...மாணவர்களின்...புடைசூழ ..பள்ளியில் இருந்து கீழே இறங்க ஆரம்பித்தேன். இங்கே plain area வில்..சினிமா நட்சத்திரங்களை ...அரசியல் பிரபலங்களை பார்க்கும் போது அவர்களைச் சுற்றிக் கூட்டம் கூடி விடுமே அதுப் போல....என்னைச் சுற்றி...மாணவர்களின் கூட்டம்... இங்கே நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் வானொலி மூலமாகவே கேட்ட அவர்களுக்கு.. அவைகளை நேருக்கு நேராக பார்த்ததாக...நாம் சொல்வதைத் கேட்பதில் அவர்களுக்கு மிக்க ஆவல்...அவர்கள் கேட்டதை எல்லாம் அருகில் இருந்து பார்த்தது போலவும்...தெரியாததை தெரிந்தது போலவும் சொல்லி சமாளித்தேன்.. ஒவ்வோரு நிகழ்வும் நம் வீட்டுக்கு அருகிலா நடக்கிறது... ஒரு வழியாக வீடு வந்து சேரும் போது இருட்டத் தொடங்கிக் விட்டது. எங்களோடு வீடுவரை வந்து சினேகத்துடன் விடைப் பெற்றவர் பள்ளி ஆசிரியர் நந்தி மாஸ்டர் அவர்கள். வீடு வந்ததும் சிஸ்டர் மதியம் என்ன சாப்பிட்ட என்றார்..சொன்னேன்....அதற்குள் பக்கத்து வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு மாணவி ஓடி வந்து...அவரது அம்மாவும்..அண்ணனும் வருவதாகச் சொன்னார்...அந்த மாணவி சொன்னார்.. தன் பெயர் அம்பிகா என்றும்...ஒன்பதாவது படிப்பதாகவும் வந்த அண்ணன் சந்திரசேட்டன் என்றும்..அது அம்மாச்சி...என்றும் அறிமுகப் படுத்தினார். வந்தவர்கள்...நலம் விசாரித்தார்கள்...முன்பின் பார்த்திராத அவர்களின் அன்பான அந்த நல விசாரிப்பு... நம் நிலப் பகுதியில் அந்த அளவுக்கு காண முடிவதில்லை . இங்கே வீட்டில் சாயா தயாரிக்க நேரம் ஆகும் என்பதால் சந்திரசே ட்டன் வேகமாகச் சென்று ...நாங்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே சாயா தயாரித்து கொண்டு வேகமாக வந்தார். சூடாக கொண்டு வந்ததை தம்ளரில் ஊற்றினால்...ஆவி பறந்து மேலே வருது... எடுத்துக் குடித்தால்.. சூடேத் தெரியவில்லை... சந்திர சேட்டன் சென்ற பிறகு...அம்பிகா..அவர் அம்மா ஆகியோர் டீச்சருக்கு சமைக்க உதவினார்கள்...மண்ணெண்ணெய் wick stove தான் அங்கே பிரதான சமையல் அடுப்பு... பக்கத்தில் குடி இருந்தவர் திருநெல்வேலியை சேர்ந்தவர் என்றும்... சர்வேயராக இருப்பதாகவும்...இரண்டு பெண் குழந்தைகள் என்றும்....ஆனால்....வெளியே அவர் குடும்பத்தைத் பார்க்க முடியாது என்றும்... அம்பிகா அம்மா சொன்னார்... அந்தத் தெருவே...என்னை வந்து பார்த்து விட்டுப் போய்விட்டது...இவர்கள் தமிழர்கள் வெளியே வரவில்லை...ஆனால் அவர்கள் வீட்டில் இருந்து ஒரு மணி நேரமாக வானொலியில் இருந்து இசை வெளிவந்துக் கொண்டுதான் இருக்கிறது. இங்கே மலைப் பகுதியில்....படுகர்கள்.. வேடர்கள்...மலையாளிகள்..தெலுங்கர்கள்...கன்னடர்கள்...முஸ்லிம்கள்... தமிழர்கள் .. மலைக்கவுண்டர்கள் என பல தலைமுறைக்கு முன்னால் வந்து குடியேறியவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களிடையே எந்த ஒரு பாகுபாடும் .. வேறுபாடும். ஏற்றத் தாழ்வும் இல்லாமல் சகோதர பாச நேடத்துடன்... ஒரேக் குடும்பமாக வாழ்கிறார்கள்... கள்ளங்கபடு.. சூது வாது. ..பொறாமை இன்றி மனித நேசத்துடன் பழகுகிறார்கள். உயரமான மலை மீது வாழ்வதால்..அவர்களின் எண்ணமும் செயலும் பேச்சும் உயர்வாகவே இருக்கிறது. இரவு உணவு...சப்பாத்தி... விளை நிலத்தில் அப்போதுதான் பிடுங்கிய கேரட் ...உருளை கலந்த கலவை.. தரையில் பாய்ப் போட்டு இரண்டு கம்பளி விரித்து..இரண்டு bed sheet போட்டு...மேலே ஒரு கம்பளி போர்த்தி படுத்தால்....கை கால்கள் சில்லிட்டு பல் பட பட வென அடித்தது .. என்னால் தூங்க முடியவில்லை...எழுந்து உட்கார்ந்து விட்டேன்.சிஸ்டர் monkey cap... ஸ்வெட்டர்..leg &,hand gloves அணிந்து தூங்கினார்... காலையில் சிஸ்டர் பள்ளிக்குச் சென்றப் பிறகு...அருகே தெரிந்த குன்றின் மீது ஏறினேன்.ஒரு சிறிய மண் திட்டின் மீது தலை வைத்து படுத்துக் கொண்டேன்...வெதுவெதுப்பான அந்த வெய்யில் சூட்டில் மெல்லத் தூங்க ஆரம்பித்தேன். நேற்றைய பஸ் பிரயாணம்... இரவு முழுக்க தூங்காதது.... அலுப்பு... அப்படியே எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியாது... முழங்கையின் மீது விழுந்த ஈரமான துளிகள் என்னை எழுப்பி விட்டது. எழுந்து உட்கார்ந்து பார்த்தால்...வெள்ளை நிறத்தில் பொட்டு பொட்டாக... முழங்கையின் மீதும்...முகத்திலும்........மேலே பார்த்தேன்.... அங்கும் இங்குமாக வெள்ளை நிறக் கொக்குகள் அலைந்து கொண்டு இருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை... சரிவான நிலப்பரப்பில் பச்சை நிறத்தில்....கேரட்..முள்ளங்கி..உருளை... முட்டைக்கோஸ்... காலிபிளவர்.முதலானவைகளின் ..விளைச்சல்...இன்னும் தூரத்தில்... யூகலிப்டஸ் மரங்கள் குன்றுகளின் மீது உயரமாக அடர்ந்து வளர்ந்து இருந்தன... அந்த மரத்தின் இலைகளை வேகவைத்து அதன் ஆவியை குளிரச் செய்து..... யூகலிப்டஸ் தைலம்... நீலகிரி தைலம் தயாரிக்கிறார்கள்... இந்த கேரட் கிழங்கின் இலைகளை துண்டு துண்டாக வெட்டி... கொத்த மல்லி தழை சட்டினி போல செய்கிறார்கள்... இப்படித் தயாரிக்கும் கேரட் இலைச் சட்டினி ...இட்லிக்கு நல்ல வாசனையுடன் சுவையாக இருக்கும்..இன்னும் இரண்டு இட்லியை உள்ளே சேர்த்து இழுக்கும். இங்கு துவரம் பருப்பு சாம்பார்... வாசமான புளி ரசம்...இவைகளை பெரும்பாலும் செய்வதில்லை...குளிருக்கு இதுவெ ல்லாம் உள்ளே இறங்காது.... அப்பப்ப பிடுங்கும் இரண்டு மூன்று காய்களை நறுக்கிப் போட்டு... சுண்ட வேக வைத்து ....காலையில் இட்லி தோசைக்கோ...மதியம் சாதத் துக்கோ....இரவு சப்பாத்திக்கோ பயன் படுத்துகிறார்கள்...சூழ்நிலைக்கேற்ப சூடான உணவு. அதோடு மூக்குக் கடலை... பருப்பு முதலான பயிர் வகைகள் கீழே இருந்துதான் மேலே மலைப் பகுதிக்கு வர வேண்டும்...இதனால் போக்கு வரத்து சார்ஜ் +கூலி சேர்ந்து கொள்வதால் .. பொருள்களின் விலை இரண்டு மடங்கு அதிகமாகி விடுகிறது.அதனால் மலைப் பகுதியில் விளையும் பொருட்களையே பெரிதும் பயன் படுத்துகிறார்கள். மடிப்புக் கொண்ட மலைத் தொடர்களில்...தேயிலை... காப்பி தோட்டங்கள் நிறைய நிரம்பி உள்ளன. தேயிலை இலைகள் பொடியாக்கப்பட்டு கால் கிலோ... அரை கிலோ...என குறைந்த விலைக்கு விற்கிறார்கள்...இந்த கலப்பிடம் இல்லாத டீ தூள் ..இதில் தயாரிக்கப் படும்....தேநீர்...வாசனையாகவும்.. .சுவையாகவும் இருப்பதால் தான்...இங்கே உள்ளவர்கள்...அடிக்கடி முழு டம்பளர் நிறைய டீ குடிக்கிறார்கள்.... அசைவ உணவை சமைக்க வேண்டும் என்றால் ... அங்கங்கே தெருவிலும்... ரோட்டின் ஓரத்திலும் கறிக் கடைகள் இருக்காது...அதற்கென்றே அனுமதிக்கப் பட்ட இடத்தில் ... அரசு முத்திரை குத்தப்பட்ட இறைச்சியை த்தான் பெறமுடியும்... தூறல் ஆரம்பிக்கவே பள்ளியை நோக்கி இறங்கி நடந்தேன்... அடுத்தநாள் வெள்ளிக் கிழமை...அன்று மட்டும் தான் பள்ளி நடக்கும்... அதற்கு அடுத்தநாள் சனிக் கிழமை... அன்றில் இருந்து பொங்கலுக்கு பள்ளிக்குத் தொடர் விடுமுறை...பொங்கலுக்கு டீச்சர் அக்காவை அழைத்துச் செல்லவே வந்து இருக்கின்றேன். இன்று காலை பகுதி மட்டும்தான் வகுப்பு நடக்கும்...மாலை பள்ளி கிடையாது. மதியம் நான் வந்ததும் ஊருக்கு கிளம்பலாம்...என்று அக்கா சொல்லிவிட்டு பள்ளிக்குச் சென்றார்... நான் வீட்டு வாசலில் நின்று.... மேலே எழுந்து வரும் வெய்யில் சூட்டில்...காய்ந்து கொண்டு இருந்தேன்... அப்போது....சந்திரசேட்டன் எங்கோ சென்றவர்...என்னைப் பார்த்ததும்...என்னை நோக்கி வந்தார்.. என்ன சாரு... குளிர் எப்படி இருக்கு... என்று வாயில் வைத்து இருந்த பீடியை இடது கையில் எடுத்து இடுப்புக்குப் பின்னால் மறைத்துக் கொண்டார். சந்திரன்... குளிர் நன்றாகத் தான் இருக்கு என்றேன்... அதற்கு அவர்... என்ன சாரு... குளிர் நன்றாக இருக்குன்னு சொல்றிங்க... ஊட்டிக் குளிர் பயங்கரமா இருக்குன்னு சொல்லுங்க என்றுச் சொல்லிச் சிரித்தார். நானும் அவரோடு சேர்ந்துச் சிரித்தேன்.. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது போல ஆ... ஹ் ஹ.. ஹா ..என்றுச் சிரித்த எங்களின் வாயில் இருந்து.. அந்த காலத்து நீராவி இரயில் என்ஜினில் இருந்து குப்.. குப் என்று வருமே அது போல. வெள்ளை நிற ஆவி.... பந்து ..பந்தாக...வெளியேறியது.... இந்த சந்திரன்... சந்திரசேட்டன் ...சந்திர ஏட்டன்... அவர்களின் குடும்பத்தில் மூத்த மகன் ..மூன்று தம்பிகள்...மூன்று தங்கைகள் என்பதால் அதிகமாகப் படிக்க வில்லை... எட்டாவதோடு படிப்பை நிறுத்திக்கொண்டு .. பெற்றோரோடு விவசாய கூலி வேலைக்குச் சென்று தம்பித் தங்கைகளை படிக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்...அந்தப் பகுதியில்..உதவி என்று வந்து விட்டால்...முதலில் வருபவர்...இந்தச் சேட்டன் தான்....மிகவும் இரக்கக் குணமும் உதவும் குணமும் கொண்டவர் என்பதால்...அங்குள்ளவர்களுக்கு இவர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அங்க பாருங்க...எப்பவும் பொங்கல் நோம்புக்கு...மத்தியானமா...பெல்லடிப்பாங்க...இன்னிக்கு என்ன ஆச்சு...பதினொரு மணிக்கே பயலுக வீட்டுக்கு வராங்க.... என்றார் சேட்டன்.... வேக வேகமாக..வீடு வந்துச் சேர்ந்த டீச்சர் அக்காவும் அம்பிகாவும்...சோர்வாக காணப்பட்டார்கள்..என்ன என்று வினவியபோது... ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனின் தந்தையார் திடீரென இறந்து விட்டதாகச் சொன்னார்கள். எங்களின் வீட்டைக் கடந்து ஒற்றை அடிப்பாதையில் போனால் தான்... சுமார் ஒரு மைல் தொலைவில் இருக்கும் அந்த மாணவனின் வீடு வரும் என்பதால்...பள்ளி ஆசிரியர்கள்...மாணவர்கள்...அந்த பகுதியில் வசிப்பவர்கள்..நாங்களும் சேர்ந்து எல்லோருமாக அந்த வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். படுகர் இன முறைப்படி...அந்த வீட்டின் முன் இசைக் கருவிகள் ஓசை எழுப்பின...ஒரு சில பெண்கள் படுக மொழியில் பாடிக் கொண்டு இருந்தார்கள்.. வீட்டிற்குப் பின்புறம் இருந்து...சமைக்கும் ஆட்டிக்கறி குழம்பின் வாசனை வந்தது... எங்களைப் பார்த்ததும்..அந்த மாணவன் ஓடி வந்து ...ஒவ்வொருவரையும் கட்டிப் பிடித்து கொண்டு....அப்பன் விட்டுப் போயிட்டார்...என்று கதறி அழுதார். மனம் கனத்த நிலையில் ...அந்த மாணவன் அழுதது...ஒரு பெரிய மேகம் தலையில் விழுந்து அழுத்துவதுப் போல இருந்தது. சற்று நேரத்தில் அந்த மாணவன்... தன் இரண்டு கைகளிலும் சொம்பு நிறைய தண்ணீரோடு...இரண்டுக் கண்களிலும் கண்ணீரோடு...அப்பா...அப்பா.. என்று அழும் மங்கியக் குரலோடு... சார்..அப்பா..இறந்துட்டார்...சாப்பிடுங்க..சார்...டீச்சர்...சாப்பிடுங்க... நீங்க சாப்பிட்டாத்தான்...அப்பா..ஆத்மா சாந்தியடையும்....சாப்பிடுங்க...என்று... அழைத்த... அழுத....அந்தக் காட்சி... இந்தக் குளிரிலும் கண்ணீரை வரவழைத்து உள்ளத்தையும் உடலையும் நடு நடுங்கச் செய்கிறது . "சேலம் வசந்த் "
Super Vasanth. மிக அருமையான பதிவு. தெள்ளிய ஓட்டம். உணர்ச்சி மிகுந்த படைப்பு.
ReplyDelete