தாத்தா
1972 ஆம் ஆண்டு...மேட்டூர் அணை வைத்தீஸ்வரா உயர்நிலைப் பள்ளியில் எழாவது படிக்கும்போது...ஒரு வாரத்துக்கும் மேலாக... "சோ..." வென்று....வானத்துக்கும் பூமிக்கும் நூல் இழைகளை கட்டித் தொங்க விட்டது போல...தொடர்ந்து....கொட்டிக் கொண்டே இருந்த மழைக் காலத்தில்....மேற்கே மறைந்த சூரியன்...தொலைந்து போய் விட்டதோ என்று தேடும் சூழலில்...நீல வானம்....அதில் நீந்தும் மேகங்கள்...அதன் உடைகளை உடனுக்குடன் மாற்றி...உடல் அழகை ஒய்யாரமாக... வளைந்து நெளிந்து அழகு காட்டி ஒரு நிமிடத்தில் மறைந்து....மீண்டும் வேறு ஒரு உரு வத்தில் அழகைக் காட்டும் காட்சிகள் எங்கும் காணோம்..இரவில் அண்ணார்ந்துப் பார்த்தால்..கண் சிமிட்டி பார்த்து கண்ணடிக்கும் கயல் விழிகளைக் வலை வீசி தேடினாலும்.... தென்பட வில்லை... சில்லென்றக் காற்று.... சிறிது சிறிதாக சிதறி விழும் மழைத்துளியு டன்...கார்த்திகை மாதத்தில் கரம் பிடித்து...தமிழகத்தில் உள் நுழையும் வடகிழக்கு பருவ மழை.... இந்த மழை காலத்தில் தான்...கையில் ஒரு காக்கி துணிப் பையுடன்.... டரக்.. புரக்...என்ற. டயர் செருப்பு சத்தத்துடன்... ஆறு அடி உயரத்துக்கு மேல்... ஆஜானுபா குவான உருவத்துடன்....தலையில் பெரிய ஒரு முழு பூசணிக்காயை வைத்தது போல முண்டாசு கட்டிக் கொண்டு வந்து சேர்ந்தார்...என் அப்பாவின் அப்பா .... ஆறுமுகத் தாத்தா...தாத்தா வந்ததை அறிந்து ....அது வரை வீட்டில் அடைந்து கிடந்த நாங்கள்...வெளியே வந்து...வாங்க தாத்தா என்று அழைத்தோம்...அப்பா .. கயிற்றுக் கட்டிலில் தத்தாவை உட்கார வைத்து அருகில் இருந்த இரும்பு பெட்டி மீது உட்கார்ந்து கொண்டார்....அம்மா...சொம்பில் தண்ணீர் கொடுத்தார்...நாங்கள் அனைவரும் கட்டிலின் எதிரே சுவர் ஓரமாக... நேர்க் கோடு கிழித்ததுப் போல சம்மணமிட்டு அமர்ந்துக் கொண்டோம்....தாத்தா...தான் வந்த விசயத்தை அப்பாவிடம் சொல்ல ஆரம்பித்தார்....அம்மா...அடுக்களையில். ..சூடாக தேநீர் தயார் செய்ய மண்ணெண்ணெய் திரி ஸ்டவ்வை பற்ற வைத்தார்...தாத்தாவின் குரல் கணீர் என எங்களின் காதுக்குள் நுழைந்து அவர் முகம் காண வைத்தது...தாத்தாவின்...முகம் ...நன்றாக புது பிளேடால் சவரம் செய்யப்பட்டு.. மொழு மொழு வென்று இருந்தது.. அகன்ற நெற்றியுடன் வழுக்கைத் தலை...பெரிய முத்து முத்தான வெள்ளை நிறப்பற்கள்... முந்திரிப் பழம் போன்ற நுனி மூக்கு... ஓய்வின்றி உழைத்து வாழ்ந்தவர் என்பதால்...உறுதியான...முரட்டுக் கைகள்...தாத்தா மீசை வைத்துக் கொள்வதில்லை....ஆனால் அப்பாவிற்க்கு. .அடங்காத ஆட்டுக் கிடா கொம்பு போல... கொடுவா மீசை....இருவர் முகத்தையும் பார்க்கும் போது....ஏட்டிக்குப் போட்டியாக தெரிந்தது.... தாத்தா வந்த நேரம்...மதியம் என்பதால்...அவருக்காக பிரத்தியேகமாக சமையல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை...அன்று அம்மா சமைத்து இருந்த மேட்டூர் அணை நீர்த் தேக்கத்தில் பிடித்த ஃப்ரெஷ் ஆன ரோகு மீன் குழம்பு.... மீன் வறுவல் ரெடியாக இருந்தது.. அப்பொழுது எல்லாம்...இப்போது போல ... சூரிய காந்தி எண்ணெய் ....palm oil...broiler chickens....அப்போது புழக்கத்திற்கு வரவில்லை... நல்ல எண்ணெய்....கடலை எண்ணெய்.. தேங்காய் எண்ணெய்....விளக்கெண்ணெய்... பசு நெய்.... இவைகள் தான்...சமையலுக்கு பயன்படுத்தப் பட்டன...அதனால் கடலை எண்ணெய் யில்....வடை.. பஜ்ஜி... போண்டா...முறுக்கு... மிக்ஸர்... பூரி...ஸ்வீட்...மீன் வறுவல்....முதலானவைகள் சமைக்கப் பட்டன...கடலை எண்ணெய் ஊற்றி பதார்த்தங்கள் செய்யும் போது.... எண்ணெய் கொதித்து... நுரை பொங்கி தளும்பும்...கை...முகத்தில் தெறிக்க வாய்ப்பு உண்டு...ஆனால்...இப்போது பயன் படுத்தப்படும் sun flower oil...palm oil... இதில் அந்த தொந்தரவு இல்லை....ஆனால் உடலுக்கு உஷ்ணம் அதிகம்... கடலை எண்ணெய் வாசத்தோடு பரிமாரப் பட்ட மீன் துண்டுகளை தாத்தா சுவைத்து ... மீன் குழம்பில் சோறு பிசைந்து...பெரிய பெரிய உருண்டைகளாக. ...பொறுமையுடன் சாப்பிட்டு முடித்தார்...வெளியே வந்த மழை வந்த இடம் தெரியாமல் வந்து போய் இருந்தது...மேட்டூர் அணை பகுதி சமதள பகுதி கிடையாது...மேடும் பள்ளமும் குன்றும் குழியுமாக..கரடு முரடாக இருக்கும்...அதன் போக்குக்குத் தகுந்தவாறு அவரவர் வீடுகளை அமைத்து இருப்பார்கள்...பெரும்பாலானவை குடிசை வீடுகள்...ஒரு சில ஓட்டு வீடுகள் அங்கும் இங்கும் தெரியும்.... மெத்தை வீடுகள்....அருகருகே அமைந்துள்ள தொழிற் சாலைகளின்... காலணி /quarters ஆகத்தான் இருக்கும்...அடிக்கடி மழை பெய்யும்...நீர் தங்காது.... தேங்காது...ஓடிவிடும். மேட்டூர் அணையில் இருந்து சேலம் . ஆத்தூர் முதலான நகரங்களுக்கு குடிநீர் பம்ப் செய்யப்படும்.. .ஆனால் ...மேட்டூர் அணையை சுற்றி வாழும். ...மக்களுக்கு. வாரம் ஒருமுறை தான் குடிநீர் வரும்....தண்ணீர் பிரச்சினை உண்டு...குடிநீர் பிடிக்க.... Pipe க்கு முன்னால்...பிளாஸ்டிக் டப்பாக்கள் தண்ணீர் வருவதற்கு முன்பே வரிசை படுத்தி இடம் பிடித்து வைத்து இருப்பார்கள்...இருந்தாலும்....தினந்தோறும்....pipe அடி சண்டை வராமல் இருக்காது...சண்டை போட்டு ஒருவாரம் பேசாமல் இருப்பார்கள்...பின்னர்.. அக்கா...அண்ணா என்று சிரித்து பேசிக்கொள்வார்கள்...அங்கு வாழ்பவர்களின் பெருப்பாலோர் அங்கு உள்ள தொழிற் சாலைகளை நம்பி வெளி ஊர்களில் இருந்து குடி வந்தவர்கள்... தாத்தா உணவு முடிந்ததும் சேலம் திரும்ப தயாரானார்...வெளியே வந்தவர்...அப்பாவிடம் சொன்னார்...இப்ப எல்லாம் .. என்னால உழைத்து சம்பாரிக்க முடியல....அதனால்... நீங்க எல்லோரும் .. சேர்ந்து எனக்கு மாதம் ஐம்பது ரூபாய் கொடுத்து விடுங்கள் என்று...ஒன்பது மகன்களில் மூத்தவரான என் அப்பாவிடம் உரிமையுடன் கேட்டார்...அப்பாவும் அப்படியே ஏற்பாடு செய்வதாக சொன்னார்...தாத்தாவை பஸ்சில் ஏற்ற நானும் கூட வருவது வழக்கம்... தாத்தா "என்ன படிக்கர" என்றார்....நானும் சொன்னேன்... ஏழாவது என்றேன்...தாத்தா... தனக்குத் தானே சிரித்துக் கொண்டு...சொன்னார்..."உன் அப்பனைப் போல military க்கோ... போலீசுக்கு கோ போகாதே ... வெள்ளைச் சட்டைப் போட்டு பேனா புடிச்சு எழுதற வேலைக்குப் போ" ...அவர் அப்போது சொன்ன அந்த வார்த்தைகளின் அர்த்தம் எனக்கு இப்போது ..ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு விளங்குகிறது... என்ன ஒரு எதிர் காலத்துக் காண சிந்தனை... தான் பட்ட உடல் உழைப்பின் கஷ்டம் போதும்.... தன் வாரிசுகள் அந்த வாழ்க்கையை வாழக் கூடாது என்று என்ன ஒரு உயர்ந்த எதிர் பார்ப்பு.... வியந்து போகும் நேரம் இது.... கீழ் மேட்டூரில் இருந்து சேலம் செல்லும் பஸ் அந்த RS பகுதியில் நின்று பயணிகளை சுமந்து செல்லும்...தாத்தாவுடன் நானும் அப்பாவும் அந்த பஸ் நிறுத்தத்தைக் கடந்து. செருப்பு தைக்கும் கடைக்குச் சென்றோம்...வழி நெடுக திடீர்க் கடைகள் தோன்றி இருந்தன....அவைகளில்... மண்.. களிமண்ணால் செய்யப்பட்ட ...சிறிய பெரிய. விளக்குகள்....கார்த்திகை தீபத்துக்கான நேர்த்தியான வடிவமைப்பில் கைத் திறனை வெளிப் படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு விற்பனைக்காக . .வைக்கப்பட்டு இருந்தன...இதைப் பார்க்கும் போது..... .....சென்ற நான்கு மாதங்களுக்கு முன்பு ஆடிப்பெருக்கு விழா அன்று வந்திருந்த தாத்தா...காவிரியில் நீராடி விட்டு ...எங்கள் வீட்டிற்கு நேராக வந்து விட்டாராம் ..அதனால் என்னை மேட்டூர் அணை 16 கண் பாலத்தின் அருகில் அரசமரத்தின் அடியில் விற்கும் கடையில்,களி மண் குடுவையில் காவிரி தீர்த்தம் பிடித்து வர அனுப்பினார் ..அங்கு இருந்த ஒரு குடுவையை வாங்கி....கீழே இறங்கி...காவிரியின் நீரை மொண்டு எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தேன்...சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்க்கு வரும் போது டப்பென்று அந்த தீர்த்தம் பிடித்து வந்த குடுவை உடைந்து தீர்த்தம் கொட்டிவிட்டது...என்னடா இப்படி ஆகி விட்டதே என்று... ஆற்ற முடியாத அழுகையுடன்...வீட்டு வாசலை தொட்டபோது....நான் சொன்னதைக் கேட்டு தாத்தா சிரித்தார்...அப்பா கோபமுகத்துடன் முறைத்தார்...தாத்தா...என் தோளைத் தொட்டு ...அது சரியாக வேகாத களி மண்ணாக இருக்கும்... அரை வேக்காடு...என்று....என்னை ... சமாதானப் படுத்தி ...சரி விடு என்றார். அந்த வகையில்...இங்கே விற்பனைக்கு வைக்கப் பட்டு உள்ள இந்த கார்த்திகை விளக்குகளிலும் அப்படி வேகாத விளக்குகள் இருக்குமோ என்று எண்ணியபடி .. செருப்புக் கடையில் உள்ள முன் பென்சின் முன் நின்றேன்....தாத்தாவிற்கு வருடத்திற்கு...இரண்டு காக்கி சட்டை களை அப்பா தருவார்...அதோடு... லாரி tyre ல் தயாரிக்கப் பட்ட செருப்பை கால் அளவு எடுத்து தைத்துத் தருவது வழக்கம்..தாத்தாவின் கால் அளவு எடுத்துக் கொடுத்து விட்டு ..செருப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அப்பா சொன்னார்...ஒரு அங்குல கன த்தில் கீழ் பகுதி ...மேல்பகுதி தோலில் வார் ...இருக்க வேண்டும்...ஆணி அடித்து வெளியேத் தெரியாமல் மடக்கி விடணும்... குதிகால் கீழே நாலு பட்டன் போன்ற ஆணி...முன் பகுதியில் மேலே மூணு அதன் கீழே நாலு பட்டன் ஆணி அடிக்க வேண்டும்.... இதுதான் ஆர்டர்...அதன் விலை. இருபது ரூபாய்...அப்படி ஆடர் படி தைத்துக் கொடுக்கும் செருப்பை போட்டு நடந்தால்....டரக் புறக் என்ற இரும்பு தரையில் மோதும் ஒலி கேட்கும்....தாத்தாவின் உயரத்திற்கு. அந்த மாதிரியான செருப்புத்தான் சிறப்பாக இருக்கும்....அப்படி தயாராகும் செருப்பை வாங்கி வருவது நான் தான்...அதை அப்பா...சேலம் செல்லும் பஸ்சில் டிரைவரிடம் கொடுத்து ..குழந்தை சித்தப்பாவின் ஆபீசிற்கு ஃபோன் செய்து சேலத்தில் வாங்கி தாத்தாவிடம் கொடுக்கச் சொல்லுவார்.தாத்தாவிற்கு சரியாக அது போய்ச் சேரும் .. இது போன்ற மழை நாட்களில்....கார்த்திகை மாதத்தில்... தீப ஒளித் திருநாள் வரும் போதெல்லாம்.... அந்த டர்க் புறக் சத்தம் என் காதுகளில் ஒலிக்க தவறுவதில்லை...".சேலம் வசந்த்"
Comments
Post a Comment